குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், கான்பூரில் இன்று(ஜுன் 4, 2022) நடைபெற்ற உத்தரப்பிரதேச வணிகர் கூட்டமைப்பின் 90-வது ஆண்டு கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், தொழிற்சாலைகள், வர்த்தக மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதி அமைப்பாக தொடங்கப்பட்டதிலிருந்தே உத்தரப்பிரதேச வணிகர் கூட்டமைப்பு, இந்த மாநிலத்தில் தொழில்மயம், வர்த்தகம் மற்றும் தொழில்முனைவு போன்றவற்றை ஊக்குவித்து வருவதாகக் கூறினார். தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கும், கொள்கை உருவாக்குவோருக்கும் இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அமைப்பாகவும் இந்த கூட்டமைப்பு திகழ்கிறது என்றார்.
எந்தவொரு வர்த்தக அமைப்பும், தனது உறுப்பினர்களின் ஆதாயத்திற்காக மட்டும் பணியாற்றாமல், ஒட்டுமொத்த சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச வணிகர் கூட்டமைப்பு, பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பாடுபட்டு வருவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பெருநிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வு (CSR) , நவீன நாகரீகத்தின் கண்டுபிடிப்பு என்றாலும், வர்த்தக சமுதாயத்தினர் பொது மக்களின் நலனுக்காக பாடுபடுவது நமது பண்டைக்கால மரபாக இருந்து வருகிறது என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார். வணிகர்கள் தாங்கள் ஈட்டிய வருவாயில், குறிப்பிட்ட ஒரு பகுதியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதற்கு, ஏராளமான ஆதாரங்கள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சிப் பயணத்தில் நம்மைவிட பின்தங்கியிருப்பவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
திவாஹர்