தன் அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக மக்களின் வாழ்க்கையோடும், மாணவர்களின் எதிர்காலத்தோடும், கல்வித் தரத்தோடும் திமுக அரசு விளையாடுகிறது!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை ஆதங்கம்.

K.ANNAMALAI

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
– திருவள்ளுவர். (அதிகாரம்:கல்லாமை குறள் எண்:405)

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.- உரை விளக்கம் – கலைஞர் மு.கருணாநிதி.

தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில், எத்தனையோ கோளாறுகளும் குளறுபடிகளும் இடம்பெற்றிருந்தாலும், தமிழக மாணவர்களை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருக்கிறது.காரணம் தமிழகத்தின் கல்வித்துறை மிகுந்த குழப்பத்தில் காணப்படுகிறது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த கல்வித்துறையும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

அப்போது தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியோடு இணைந்து செயலாற்ற முடியும் ஆனால், தமிழக அரசு; மத்திய அரசோடு இசைந்து போகக்கூடாது என்று கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது. இந்த மோதல் போக்கினால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் மாணவர்கள் மட்டுமே. இதற்கு என்னால் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். முதலில் சொல்வதென்றால் நீட் தேர்வு.

ஆசிரியர் பணியிடம் முதல் ஐ.ஏ.எஸ் பணியிடம் வரை அத்தனைக்கும் நுழைவுத்தேர்வு இருக்கும்போது தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வியில் பொது நுழைவுத்தேர்வு எழுத கூடாது என்று இந்தியாவின் ஒற்றை மாநிலம் மட்டும் அடம்பிடிக்கும் நிலையால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே.

செயற்கையாக இவர்கள் உருவாக்கிய ஒரு பரபரப்பு விட்டு விடக்கூடாது என்று ஒரு ஒப்பனை கமிஷன் மூலம் தப்பான அறிக்கை வாங்கி, எத்தனை அவமானப்பட்டாலும் இன்னும் அதனை வரட்டு ஜம்பத்திற்காக மட்டும் நீட் எதிர்ப்பினை பிடித்துக் கொண்டிருப்பது தமிழக மாணவர்களை கடுமையாக பாதிக்கும் செயல்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய மாநில அரசாலும் மாற்ற முடியாது என்ற நிதர்சனமான உண்மை புரிந்திருந்தும் அரசியல் ஆதாயங்களுக்காக அப்பாவி மாணவர்களை அரசு பலிகடா ஆக்கி மாணவர்களின் கல்வியுடன் திமுக அரசு கல்வியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஐஏஎஸ் ஐபிஎஸ் பணிக்கான தேர்வில் வெறும் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். முப்பதாயிரம் பேர் எழுதி, வெறும் 670 பேர் முதல் கட்ட தேர்ச்சி பெற்று, இறுதியில் 27 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் . அப்படியானால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தாழ்ந்து இருக்கும் தமிழகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டுமே தவிர இந்தியாவிற்கான ஒட்டுமொத்த குடியுரிமை பணி தேர்வுக்கான சிவில் சர்வீஸ் பரீட்சைகளை எல்லாம் ரத்து செய்வதா? புத்திசாலித்தனம்.

தொடக்கக் கல்விக்கான பள்ளிக்கூடங்களில் 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. அதைவிட இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் சராசரி மாணவர் விகிதாச்சாரத்தில் கணக்கிட்டால் ஒரு பள்ளிக்கு வெறும் பத்து மாணவர் மட்டுமே இருக்கிறார்கள். மக்கள் அரசின் பாடத்திட்டத்தையும் அரசின் கல்வி முறையையும் தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள் என்பது தொடக்கக் கல்வியிலேயே வெளிப்படையாக தெரிகிறது.

இதற்கு காரணம் மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தும் போது அதில் குற்றம் குறைகளை எல்லாம் கண்டுபிடித்து தமிழக அரசு தனக்காக ஒரு தனி கல்விக் கொள்கை வகுக்கும் என்று சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் வாழ்க்கையோடும் தமிழக அரசு இன்னும் விபரீதம் புரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதே பொருள்.. பரபரப்பை ஏற்படுத்தி திமுக ஓட்டு அறுவடை செய்யலாம். ஆனால், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்து துன்பப்படும் நிலை ஏற்படும் என்பதே மிகுந்த வருத்தமான செய்தி.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி அமைச்சர்களும் குஜராத்தில் கூடி இதனை செய்து கொண்டிருக்கும் போது, தமிழக அரசு சம்பந்தமே இல்லாதது போல இங்கிருக்கும் அமைச்சர்கள் முதல்வர் குடும்பத்திற்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி கூட்டம் நடக்கும் போது அதற்கு நிதியமைச்சர் செல்ல மறுக்கிறார். இந்தியாவிற்கான கல்வி அமைச்சர்கள் கூட்டம் தற்போது குஜராத்தில் நடக்கும் போது இங்கு இரண்டு கல்வி அமைச்சர்கள் இருந்தும் ஒருவரும் செல்லவில்லை. இதன் மூலம் திமுக அமைச்சர்களின் அக்கறையின்மையையும், பொறுப்பின்மையையும் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழின் தவமே என்று விளம்பரம் தந்தால் மட்டும் போதாது, இத்தனை ஆண்டுகாலம் எதுக்காக தவமிருந்து மொழியை ஒரு கட்டாயப் பாடமாகக் கூட ஆக்க முடியாத திமுக தமிழை பாட மொழியாகவும், இன்னும் பயிற்று மொழியாகவும் அறிவித்த புதிய தேசிய கல்விக் கொள்கையை கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் காரணம் என்ன?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் தமிழக அரசு சார்பில் துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார்.

தங்களால் தமிழுக்கு இத்தனை நாள் செய்யமுடியாத நன்மையை பாரதப் பிரதமர் செய்ததை பாராட்டி வரவேற்க வேண்டிய தமிழக அரசு, புதிய தேசியக் கல்வி கொள்கை கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணிக்கக் காரணம் எங்கே தங்கள் குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடுமோ? என்ற அச்சம் பயம் நடுக்கம்.

இப்படி இவர்கள் இந்திய அரசின் கூட்டத்தை புறக்கணிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் மாணவர்களின் கல்வித்தரமும் கல்வியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு தன் அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக மக்களின் வாழ்க்கையோடும், மாணவர்களின் எதிர்காலத்தோடும், கல்வித் தரத்தோடும் விளையாடுகிறது.

திமுகவின் இதுபோன்ற செயல்முறை மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக செய்ய திமுக அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மாணவர்கள் சார்பாக பாரதிய ஜனதா கட்சி, தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

தொணடர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்., B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply