பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடமும் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். புதுதில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இடம் பெற்றுள்ள முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகத்தை திரு நாயுடு, அவரது மனைவி திருமதி உஷா நாயுடு ஆகியோர் இன்று பார்வையிட்டனர். இருவரும் 90 நிமிடம் அருங்காட்சியகத்தில் செலவிட்டு இந்தியாவின் பயணம் குறித்த ஒலி-ஒளி காட்சிகளை பார்வையிட்டனர். பின்னர் பார்வையாளர் குறிப்பேட்டில் திரு நாயுடு தமது கருத்துக்களை எழுதினார்.
“நமது தேசிய தலைமையில் பன்முகத்தன்மை மதிக்கப்பட்டதை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் நம்மைப்போன்ற துடிப்புமிக்க ஜனநாயகத்திற்கு முக்கியமான அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கான செய்தி கூறப்பட்டுள்ளது. நமது தேசத்தின் வறுமையை, எழுத்தறிவின்மையை எதிர்த்த போராட்டத்தில் இருந்து விண்வெளி ஆய்வு புதிய உச்சங்களை தொட்டது வரையிலான மாற்றங்களின் அனுபவத்தை குடிமக்கள் உணரும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுடன் சென்றிருந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவர் திரு நிருபேந்திர மிஸ்ரா, துணைத்தலைவர் திரு ஏ. சூர்யபிரகாஷ் ஆகியோர் அவரின் சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு தொடங்கி, டாக்டர் மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதையும் இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கிறது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
–எம்.பிரபாகரன்