குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு!

எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்” என எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply