தொழில்நுட்பம் மற்றும் மின்னணு புரட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அவர், முனிச் நகரில் இந்திய வம்சாவழியினரிடையே உரையாற்றினார்.
தகவல் தொழில்நுட்பம் அல்லது மின்னணு தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
10 நாட்களில் ஒரு யுனிகான் நிறுவனம் தொடங்கப்படுவதாகவும், மாதந்தோறும் ஐந்தாயிரம் நிறுவனங்கள் காப்புரிமைக்காக விண்ணப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மாதந்தோறும் சராசரியாக 500 ரயில் பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும், 18 லட்சம் வீடுகளுக்கு துhய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
நாட்டில் அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாக திகழ்வதாகவும் மின்சார வசதி மற்றும் சாலை வசதிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
நாட்டின் பன்முகத்தன்மையே நம்மை வலிமையாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.தொழில்துறையில் புதிய இந்தியா முன்னிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
மின்னணு கொள்முதல் இணையதளத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், வேளாண் நிலங்களில் உரங்களை தெளிப்பதற்கு ட்ரோன் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க வேண்டும் என்ற இலக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மொபைல் தொலைபேசி தயாரிப்பாளராக திகழும் இந்தியா மற்ற நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
உலக நாடுகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா