அஹமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் 70-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித்ஷா, விடுதலை பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் இவ்வேளையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு மூலம் நாட்டிற்கான செழுமை என்ற தீர்மானத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டுள்ளதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் வங்கி சேவைகளின் பயன்களை குடிமக்கள் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
71-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வங்கியின் சம்பந்தப்பட்டவர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். சர்தார் பட்டேலின் ஊக்கத்துடனும், போர்பந்தர் இளவரசர் உதயபன்சிங்கின் முயற்சியாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களுக்கு உரிமையாளர்களானார்கள். விவசாயிகளை நில சொந்தக்காரர்களாக மாற்றியதில் இந்த வேளாண் வங்கி முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
குஜராத் வேளாண் துறைக்கு இந்த வேளாண் வங்கி மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். வேளாண் கட்டமைப்புக்காக குஜராத் விவசாயிகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால கடன்களை இந்த வங்கி வழங்கியதாகவும், அமைச்சர் திரு அமித்ஷா கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா