மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐஐடி ஹைதராபாத்தில், பல்வேறு புதிய வசதிகளைத் தொடங்கி வைத்து, BVRSCIENT மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், நீடித்த அறிவியல் & தொழில்நுட்பத்திற்கான க்ரீன்கோ பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஜப்பானைச் சேர்ந்த BoG தலைவர் டாக்டர் பி.வி.ஆர்.மோகன் ரெட்டி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமைப் பிரதிநிதி சைடோ மிட்சுனோரி, க்ரீன்கோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.அனில்குமார் சாலமலாசெட்டி, க்ரீன்கோ நிறுவனத்தின் இயக்குனர் குழுத் தலைவர் திரு.ஓ.பி. பட், ஐஐடி ஹைதராபாத் இயக்குனர் பேராசிரியர் பிஎஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், நான்காவது தொழிற்புரட்சியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்றும், இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்துவதிலும், சுதந்திர தின அமிர்தகாலத்தில், சிறப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் ஐஐடி ஹைதராபாத் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், ஐஆர் 4.0 மற்றும் 21-ம் நூற்றாணடு வேலைவாய்ப்பு சந்தையை பயன்படுத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்குமாறும் ஐஐடி ஹைதராபாத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியாவை அடைவதென்ற பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கு, நாம் பாடுபட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, இனியும் வாங்கும் நாடாகவே இருக்காமல், புதுமைக் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, நாம் தன்னிறைவு அடைவதோடு, உலக நலனை மேம்படுத்துவதற்கும் நமது சொந்த மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து, குறைந்த செலவில் உலகளாவிய தீர்வுகளை வழங்க ஏதுவாக, ஐஐடி ஹைதராபாத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டுமெனவும் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார்.
எஸ்.சதிஸ் சர்மா