உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் சார்ந்த வானொலி சாதனங்களை ஆயுதப் படைகளுக்கு வழங்கி ‘தற்சார்பு இந்தியாவை’ அடைவதில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்.

ஆயுதப்படைகளில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட வானொலி சாதனங்களை (எஸ்.டி.ஆர்) உருவாக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சகம் துரிதப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு உணர்திறன் எஸ்.டி.ஆர் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளுக்கு, அவற்றின் முழுமையான வாழ்க்கை சுழற்சி மேலாண்மை கட்டமைப்பு அவசியம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு, உருவாக்கம், தயாரிப்பு, சோதனை/ சான்றிதழ் மற்றும் பராமரிப்பு சூழல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விரிவான திட்டம் மற்றும் காலக்கெடுவுடன் எஸ்.டி.ஆர்-ஐ உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு டி.ஆர்.டி.ஓ-வின் பாதுகாப்பு மின்னணு செயலிகள் ஆய்வகம் (டீல்) வரைவு திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பான வானொலி தொலைத்தொடர்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியாவின்’ இலக்குகளை அடைய இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் தெரிவித்தார். இதன் மூலம் இறக்குமதிக்கான நிதி குறைவதுடன், ஆயுதப் படைகளுக்கு பாதுகாப்பான வானொலி இணைப்பு உருவாக்கப்படும் என்று கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply