குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மாலத்தீவு அதிபர் சந்தித்துப் பேசினார்.

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது ஷோலிஹ், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (02.08.2022) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் ஷோலிஹ்-ஐ வரவேற்றுப் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் நெருங்கிய நண்பரும், மாலத்தீவின் தலைசிறந்த தலைவரும், அந்நாட்டை நிலையான, வளமான தேசமாக மாற்றியவருமான  அதிபர் ஷோலிஹ்-ஐ வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு திகழ்கிறது என்றார். இருநாட்டு மக்களும் வலுவான கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை பல 100 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ‘அண்டை நாடு முதலில்’ என்ற இந்தியாவின் கொள்கையில், மாலத்தீவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்தியாவின் தேவை அடிப்படையிலான நிதி மற்றும் வளர்ச்சித் திட்ட உதவிகள், மாலத்தீவு அரசின் வளர்ச்சித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்த உதவுவதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

இந்தியா- மாலத்தீவு இடையிலான  வளர்ச்சித் திட்ட ஒத்துழைப்பு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள், பொருளாதார உறவுகளை விரைவாக விரிவுப்படுத்தப்பட்டு வருவதுடன், மாலத்தீவு அரசு மற்றும் மக்களுடனான இந்தியாவின் நட்புறவும்,  சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார். கொவிட்-19 பாதிப்பு காலத்தில் மாலத்தீவு அரசு மற்றும் மக்கள் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை குடியரசுத் தலைவர் பாராட்டினார். பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா – மாலத்தீவு இடையிலான வலுவான ஒத்துழைப்பு,  ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் அவர் பாராட்டினார்.

இந்தியா – மாலத்தீவு நட்புறவில் திறன் உருவாக்கம் தான் முக்கிய தூணாக திகழ்கிறது என்றும் அவர் கூறினார். மாலத்தீவு அதிபரின் இந்தப் பயணத்தின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாலத்தீவில் மேற்கொள்ளப்படும் திறன் உருவாக்க முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply