உடல் அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!-போலீசார் விசாரணை.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சஞ்சீவி நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஏ. ஆர். கே. நகர் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில், அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று, சாலையோரம் உள்ள கால்வாய் தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு, அதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இன்று (06/08/2022) காலைஅவசர போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீசாரும், திருச்சி மாவட்ட திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாரும் வந்தனர்.

எல்லை பிரச்சனையால் ஏற்பட்ட குழப்பம்!

தண்ணீரில் மிதந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அல்ல என்றும், அதேபோல் திருச்சி மாவட்ட திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் இது எங்கள் காவல் எல்லைக்கு உட்பட்டது அல்ல என்றும் மறுத்தனர். இதனால் இந்த பிணத்தை யார் கைப்பற்றுவது என்ற குழப்பம் அங்கு ஏற்பட்டது.

இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக சர்வேயர் அங்கு வரவழைக்கப்பட்டார். ஆவணத்தில் உள்ளபடி அப்பகுதி பனையக்குறிச்சி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது என்ற விவரம் தெரியவந்தது.

அதன் பிறகு திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி தடய அறிவியல் நிபுணருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனே தடய அறிவியல் நிபுணர் வந்து சேர்ந்தார்.

தண்ணீரில் பிணமாக கிடந்த அடையாளம் தெரியாத அந்த நபர் இறந்து குறைந்தது நான்கு நாட்களுக்கு மேல் ஆனதால், உடல் உப்பி நிர்வாணமாக குப்புறப்படுத்த நிலையில் தண்ணீரில் மிதந்தது. பிணமாக மிதந்தவரின் ஆடைகள் சாலையோரம் கைப்பற்றப்பட்டது. ஆடையில் எந்த ரத்தக் கறைகளும் இல்லை.

உடல் அழுகிய நிலையில் இருப்பதால், சம்பவ இடத்திற்கே அரசு மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் தான் தற்போது அந்த சடலத்தின் நிலை இருக்கிறது.

பிணமாக மிதந்த இந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? ஆடைகள் எல்லாம் அவிழ்த்து வைத்து விட்டு அந்த தண்ணீரில் இறங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற இந்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து திருவெறும்பூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply