இந்தியாவை இப்போது பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாக உலகம் காண்கிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற வியாபாரிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளதாக கூறினார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன என்று தெரிவித்த அவர், 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்தியப் பொருளாதாரம் பலவீனமானதாகக் கருதப்பட்டதாகவும், இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறினார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வணிகம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், எந்தவொரு அதிகாரியாலும் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்று வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உறுதியளித்தார்.
மக்கள் மற்றும் வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு வர்த்தகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார், ஆனால் அவர்கள் நெறிமுறை வர்த்தக நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எஸ்.சதிஸ் சர்மா