நாட்டிற்குக் கேடு விளைவிக்க விரும்புவோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயலும் சக்திகளிடமிருந்து, நாட்டைப் பாதுகாக்கத் தேவையான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உருவாக்கியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று(13.8.2022), மார்வாரி வீரர்,   வீர் துர்காதாஸ் ரத்தோரின் சிலை திறப்பு விழாவில் பேசிய  பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உயர் முன்னுரிமை அளிப்பதோடு, நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சிப்போருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார்.  நமது பாதுகாப்புப் படைகளுக்கு,  அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்,  , தேசநலனைப் பாதுகாக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

வலிமையான ராணுவத்தை உருவாக்க, பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.  இதற்கான முன்முயற்சிகளை, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.  அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் காரணமாக,  பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 25 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா  தற்போது உருவெடுத்துள்ளதாகவும் திரு.ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

திவாஹர்

Leave a Reply