1.3 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நாட்டில் இந்திய ரயில்வேயின் பயணிகள் போக்குவரத்தின் இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய இருக்கையின் தேவை பெருமளவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் பயணச்சீட்டை முன்பதிவு செய்து தேவைபடுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இணைய தளம் மூலம் சட்டவிரோத மென்பொருள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுக்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்புப்படை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மேற்கு ரயில்வே பாதுகாப்புப்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1688 முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவாஹர்