செப்டம்பர் 1-2 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு பயணம்!

செப்டம்பர் ஒன்று இரண்டு ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொச்சி விமான நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த புனித தலமான காலடி கிராமத்திற்கு பிரதமர் செல்வார். செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 9:30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் பணியில் சேர்த்து வைப்பார். அதன் பிறகு மதியம் 1:30 மணிக்கு மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

கொச்சியில் பிரதமர்:

தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு, குறிப்பாக கேந்திர துறைகளில் இத்திட்டத்திற்கு பிரதமர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் படையில் சேர்க்க உள்ளார். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட விக்ராந்த், நவீன ரக தானியங்கி அம்சங்களுடன், இந்திய கடல்சார் வரலாற்றில் பிரம்மாண்டமான போர்க்கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது.

1971-ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. 100 எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் உபகரணங்களையும், இயந்திரங்களையும் விக்ராந்த் போர்க்கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும்.

மேலும், காலனிய காலத்தில் இருந்து விலகியதைக் குறிக்கும் வகையிலும், பாரம்பரிய இந்திய கடல்சார் கலாச்சாரத்திற்கு இணையாகவும் புதிய கடற்படை கொடியை நிகழ்ச்சியின் போது பிரதமர் அறிமுகப்படுத்துவார்.

மங்களூருவில் பிரதமர்:

மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பிலான பல்வேறு இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

புதிய மங்களூர் துறைமுக ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் கொள்கலன்கள் மற்றும் இதர சரக்குகளை கையாள்வதற்கு ரூ. 280 கோடி மதிப்பில் இயந்திரமயமாக்கப்பட்டுள்ள 14 ஆம் எண் நிலையை பிரதமர் திறந்து வைப்பார். இயந்திரமயமாக்கப்பட்ட முனையம், செயல்திறனை அதிகரிப்பதுடன் செயல் நேரத்தைக் குறைத்து, நிலையை அடைவதில் ஏற்படும் காலதாமதத்தை நீக்கி துறைமுகத்தில் இருக்கும் நேரத்தை சுமார் 35% குறைத்து, வணிக சூழலுக்கு ஊக்கமளிக்கும். திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் கையாளும் திறனில் 4.2 மில்லியன் டன்னுக்கு (வருடாந்திர சரக்கு கையாளும் திறன்) அதிகரித்திருப்பதுடன், 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 6 மில்லியன் டன்னுக்கு மேல் உயரும்.

ரூ. 1000 கோடி மதிப்பில் துறைமுகத்தால் மேற்கொள்ளப்படும் ஐந்து திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். அதிநவீன கிரயோஜனிக் எல்.பி.ஜி சேமிப்பு முனையத்துடன் பொருத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த எல்.பி.ஜி மற்றும் மொத்த திரவ பி.ஓ.எல் வசதி, 45,000 டன் முழு கொள்ளளவு (மிகப்பெரிய எரிவாயுக் கொள்கலன்கள்) வரை இறக்கும் வகையில் திறன் கொண்டிருக்கும். இந்தப் பகுதியில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்திற்கு இந்த வசதி ஊக்கமளிப்பதுடன் நாட்டின் முதன்மை எல்.பி.ஜி இறக்குமதி துறைமுகங்களுள் ஒன்றாக இந்த துறைமுகத்தின் தரத்தை மறுசீரமைக்கும். சேமிப்பு தொட்டிகள் மற்றும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சமையல் எண்ணெய் சேமிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டங்கள் விட்டமின் மற்றும் சமையல் எண்ணெய் கப்பல்களின் செயல் நேரத்தை மேம்படுத்துவதோடு வர்த்தகத்திற்கான ஒட்டுமொத்த சரக்கு செலவையும் குறைக்கும். குலாயில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதன் மூலம் மீன்கள் பாதுகாப்பாக கையாளப்படுவதோடு, உலக சந்தையில் சிறந்த விலையையும் எட்டும். சாகர்மாலா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள், மீனவர் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை விளைவிக்கும்.

மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பி எஸ் VI தரம் உயர்த்தல் திட்டம் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை ஆகிய இரண்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். ரூ. 1830 கொடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பி எஸ் VI தரம் உயர்த்தல் திட்டம், சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் உகந்த தூய்மையான பி எஸ் VI எரிவாயுவை உற்பத்தி செய்ய வழிவகை செய்யும். ரூ. 680 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, தூய்மையான நீரின் மீதான சார்பை குறைக்கவும் ஆண்டு முழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோ ரசாயனங்களின் வழக்கமான விநியோகத்தை உறுதி செய்யவும் உதவும். நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஆலை, சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு தேவையான நீராக கடல் நீரை மாற்றும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply