ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று (செப்டம்பர் 5 2022) புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடு முழுவதுமுள்ள 45 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தனது ஆசிரியர்களை நினைவுகூர்ந்ததுடன், ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்று தராமல், அன்பையும், உத்வேகத்தையும் வழங்கியதாக தெரிவித்தார். தனது குடும்பத்தினர், ஆசிரியர்கள் வழிகாட்டுதல் காரணமாக, தனது கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமை தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார். தன் வாழ்க்கையில் எதை சாதித்தாலும், அதற்காக தனது ஆசிரியர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் உள்ளிட்டவை இன்றைய அறிவுசார் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்று அவர் குறிப்பிட்டார். இந்த துறைகளில் இந்தியாவை மேலும் வலுப்படுத்த பள்ளிக்கல்வி வாயிலாக அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றார். அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளின் உண்மையான வளர்ச்சியை அடைய, தாய்மொழி வழிக்கல்வியே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நமது ஆரம்பகால வாழ்வில் நமக்கு வாழும் கலையை கற்று தருவது நமது தாய்மார்கள் தான். அதனால்தான், இயல்பான திறமையை வளர்ப்பதற்கு தாய்மொழி உதவுகிறது. தாய்க்கு அடுத்த நிலையில், நம் வாழ்வில் கல்வியை கற்றுத் தருவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் தாய்மொழியில் பாடம் கற்று தந்தால், மாணவர்கள் எளிதாக திறமையை வளர்த்து கொள்ளலாம். அதனால்தான் தேசிய கல்விக் கொள்கை 2020-ல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், இந்திய மொழிகளில் பாடம் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நம் வாழ்க்கையை உதாரணமாக வைத்து, சிக்கலான கொள்கைகளை எளிதாக விளக்குபவர்களே சிறந்த ஆசிரியர்கள் என அவர் கூறினார்.
ஆசிரியர்கள் குறித்த ஒரு புகழ்பெற்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், “சாதாரணமான ஆசிரியர் கூறுகிறார், நல்ல ஆசிரியர் விளக்கமளிக்கிறார், உயர்ந்த ஆசிரியர் நிரூபணம் செய்கிறார் மற்றும் சிறந்த ஆசிரியர் உத்வேகத்தை தருகிறார். சிறந்த ஆசிரியருக்கு இந்த நான்கு குணங்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.
“மாணவர்களிடையே, கேள்விகளை கேட்பது மற்றும் ஐயங்களை வெளிப்படுத்தும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். கேள்விகளுக்கு பதில் தருவதன் மூலமும்., சந்தேகங்களை தீர்த்து வைப்பதாலும், ஆசிரியர்களின் அறிவுத் திறனும் பெருகும். ஒரு சிறந்த ஆசிரியர், எப்போதும் புதிதாக ஒன்றை கற்று கொள்வதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்” என்று அவர் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா