புதுதில்லியில் வருடத்திற்கு இருமுறை நடக்கும் உயர்மட்ட அளவிலான ராணுவ தளபதிகள் மாநாடு 7.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்திய ராணுவத்தின் உயர்மட்ட தலைமை அதிகாரிகள், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு துறை எதிர்நோக்கும் சவால்கள் போன்றவைகள் குறித்து விரிவாக விவாதிப்பார்கள். மேலும் துறைசார்ந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தளவாடங்கள், நிர்வாகத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, சுயசார்பு நடவடிக்கைகள் மூலம் முக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீனமயமாக்கலை நடைமுறைப்படுத்துவது போன்றவைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டின் மூன்றாம் நாளில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். குறிப்பாக, எதிர்கால மாற்றத்திற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கோடானுகோடி குடிமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், எழுச்சியூட்டும் அமைப்பாகவும் இந்திய ராணுவம் இருக்கிறது என்றார். நமது எல்லைகளை காக்கும் நடவடிக்கைகளிலும், தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும்போதும், சமூக நிர்வாக பணிகளுக்காக அழைக்கப்படும்போதும் இந்திய ராணுவம் சிறந்த அளவில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்திய ராணுவம் எப்போதும், எந்தசூழ்நிலையிலும் தயார் நிலையில் இருக்கும் ஆற்றல் கொண்டது என்று ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். முதன்மை கல்வி மற்றும் தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்திய ராணுவம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் மூலம் சுயசார்பு நடவடிக்கைகள் மூலமாக நவீன மயமாக்கலை செயலாற்றி வருகிறது என்றார். இந்திய ராணுவம் மற்றும் அதன் தலைமை பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள் மீது தனக்கு பரிபூர்ண நம்பிக்கை உள்ளது என்றார். எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலைகளிலும் திறன்பட செயல்படுவதற்கு ராணுவத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஷ் சர்மா