தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு பைபர் படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது இரும்பு ரோப்பால் கொடூரமாக தாக்குதல் நடத்தினார். இதனால் 5 மீனவர்கள் படுகாயமடைந்ததும், மீனவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதும் மிகவும் வேதனையளிக்கிறது.

மேலும் மீனவர்கள் இருந்த படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவி, வலைகள் மற்றும் 2 பேட்டரி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

உயிர்பிழைத்தால் போதும் என்று கரை திரும்பிய மீனவர்கள் பொரையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இச்சம்பவத்தால் தமிழக மீனவர்கள்
அதிர்ச்சியடைந்து, துயரத்தில் இருக்கிறார்கள்.

தமிழக அரசு, பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு – இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply