மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு, நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து ஆண்டுகள் நீடிக்கின்றன. இவைகள் தான் இன்றையச் சூழலில் ஆசிரியர்களின் உடனடித் தேவையாக இருக்கிறது. இதனை நிறைவேற்றினாலே ஆசிரியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் பயன் தரும்.

ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மேற்கொண்டதும், அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே. மேலும் ஆளும் தி.மு.க வின் தேர்தல் கால அறிவிப்பில் ஆசிரியர்களுக்கு வெளியிட்ட அறிவிப்புகள் இன்னும் முழுமை பெறவில்லை.

இச்சூழலில் தொடர்ந்து ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனாலும் இன்னும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது.

அரசு அறிவித்த புதிய திட்டங்கள் பயனளிக்கும் என்றாலும், அதனை விட மிக முக்கியமாக ஆசிரியர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகள் தான் மிக மிக அவசியமானது.
ஆனால் தமிழக அரசு, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிதி இல்லை என்று சொல்லியதோடு, குழு அமைத்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறி வரும் வேளையில், இப்போது ஆசிரியர்களுக்கு ரூ. 225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதாவது ஆசிரியர்களின் பல்லாண்டு கால கோரிக்கைகளுக்கு முக்கிய கவனம் செலுத்தி, அதற்கெல்லாம் நிதி ஒதுக்கி, நிறைவேற்றினால் அது ஆசிரியர்களின் பணிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

குறிப்பாக தமிழக அரசு, ஆசிரியர்கள் நலனில் எது முதன்மையான, மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறதோ அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டாலே ஆசிரியர்கள் நலன் காக்கப்படும்.

எனவே தமிழக அரசு, முதலில் ஆசிரியர்கள் ஏற்கனவே விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வருங்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply