இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நவ்பாரத் டைம்ஸ் இன்று (மார்ச் 12, 2023) ஏற்பாடு செய்திருந்த அனைத்து மகளிர் இருசக்கர வாகனப் பேரணியைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஜனாதிபதி தனது செய்தியில், பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். குடும்பம் பாதுகாப்பாக இருந்தால் சமூகம் பாதுகாப்பாக இருக்கும். சமுதாயம் பாதுகாப்பாக இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான நடைமுறைகளைக் கைவிடுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த அடிப்படைக் கடமையைச் செய்ய ஒவ்வொரு குடிமகனும் பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களிடம் மரியாதையான நடத்தைக்கான அடித்தளத்தை குடும்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயும் சகோதரியும் தங்கள் மகன் மற்றும் சகோதரனிடம் அனைத்துப் பெண்களுக்கும் மரியாதை அளிக்கும் விழுமியங்களைப் புகுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அத்துடன் மாணவர்களிடையே பெண்கள் மீதான மரியாதை மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
பெண்களுக்குத் தாயாகும் திறனை இயற்கை வழங்கியுள்ளது, தாய்மை அடைந்த பென்னுக்குத் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துவிடுகிறது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். தடைகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும் பெண்கள் தங்கள் துணிவு மற்றும் திறமையின் வலிமையால் வெற்றியின் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஊடகங்கள் தமது விளம்பரங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முழுமையான எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
நமது தேசத்தின் மகள்கள் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போதுதான் ‘தன்னம்பிக்கை இந்தியா‘ மற்றும் ‘புதிய இந்தியா‘ என்ற இலக்கை அடைய முடியும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
திவாஹர்