மத்திய தகவல், ஒளிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், திரு.அனுராக் சிங் தாக்கூர், 2023 மார்ச் 11-ம் தேதியன்று தனது புனே பயணத்தின் போது தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தை (NFAI) பார்வையிட்டு, தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் இந்திய சினிமாவின் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய உயிர்நாடியை வழங்குவதாகவும், அனைவராலும் காண முடியாத பல திரைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த தரத்தில் கிடைக்கும் எனவும் அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
புனேவில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் (NFHM) முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, 3 முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை, திரைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஃபிலிம் ரீல்களைப் பாதுகாத்தல் மற்றும் திரைப்படங்களின் மறுசீரமைப்பு ஆகும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் திரைப்படப் பாதுகாப்புத் துறையில் மகத்தானவை மட்டுமல்லாமல், உலகளவில் எங்கும் செய்யப்படவில்லை.
இன்றுவரை, 1293 திரைப்படங்கள், 1062 குறும்படங்கள் & ஆவணப்படங்கள் 4K மற்றும் 2K தெளிவுத்திறனில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. திரைப்படப் பாதுகாப்பில் உலகின் தலைசிறந்த எல்‘ இமேஜின் ரிட்ரோவட்டா என்ற சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய திரைப்பட ஆவணக் காப்பக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்பட பாதுகாப்பு ஆய்வகத்தை திரு.அனுராக் சிங் தாக்கூர் பார்வையிட்டார். அடுத்த 3 ஆண்டுகளில், பல திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படவுள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா