மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், “தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்” என்ற திட்டத்தின் கீழ் 4.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், தி நகர் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 12.04.2023 (புதன்கிழமை) அன்று விடப்பட்டன.
மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், டாக்டர் ஜி. தமிழ்மணி, மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் திரு. எம். சிவகுமார், உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மண்டபம், மண்டபம் விசைப்படகு சங்கம் மற்றும் நாட்டுப்படகு சங்க முக்கிய நிர்வாகிகள் இவற்றை கடலில் விட்டனர். இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி, டாக்டர் பி. ஜான்சன் ஒருங்கிணைத்தார்.
மத்திய அரசின் இத்தகைய முயற்சிக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், பச்சை வரி இறால் வளத்தை பாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் கூறினர். இத்திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 57.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்