ராஜஸ்தான் மாநிலத்துக்கு மூன்று நாள் பயணமாகச் சென்ற, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) தலைவர் திரு மனோஜ் குமார் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
ஜெய்ப்பூரின் தாடியா கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் மூலமாக பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (PMEGP) தொடர்பான விரிவான தகவல்கள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற மற்றொரு பயிலரங்கில் உரையாற்றிய கே.வி.ஐ.சி. தலைவர் திரு. மனோஜ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்து ஊக்குவிப்போம்’ என்ற தாரக மந்திரம் காதியை உள்ளூர் முதல் உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது என்றார். ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அம்சமாக காதி மாறியுள்ளது என அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதேசி இயக்கத்தில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறிய தொழில்களை நிறுவ முடியும் என அவர் கூறினார். இதன் மூலம் அதிக அளவிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை அவர்கள் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
காதி பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் ஊதியமும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை எனவும் அவர் கூறினார். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு காதி கைவினைஞர்களின் ஊதியத்தை, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் 150 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தியிருப்பதாக மனோஜ் குமார் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா