மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதியின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை.

பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா தீதியின் அழைப்பின் பேரில்  மே 1  அன்று மாலே வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின் போது, இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும்,  பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையிலான நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்தவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பரஸ்பர அக்கறை கொண்ட பரந்த அளவிலான பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர், மேலும்  பாதுகாப்பு குறித்த களங்களில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அங்கீகரித்தனர். சர்வதேச சட்டம் மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக்கொண்டதுடன்,  இந்தக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

கூட்டுப் பயிற்சிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் வருகைப் பரிமாற்றங்கள் உட்பட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சர்கள் வரவேற்றனர். பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை, இணையப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாதுகாப்பு வர்த்தகம், திறன் மேம்பாடு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான கூடுதல் வழிகளை ஆராய அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்தப் பயணத்தின் போது,  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவுகளின் அதிபர்  திரு இப்ராகிம் முகமது சோலிஹ்-ஐ மரியாதை நிமித்தமாகச் சந்தித்துடன், வெளியுறவு அமைச்சர் திரு  அப்துல்லா ஷாஹித்தையும் சந்தித்தார்.

மேலும், மாலத்தீவு அதிபர் சோலிஹ் முன்னிலையில், ஹுராவிக்கு மாற்று கப்பலை இயக்கும் விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் , அமைச்சர் தீதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலத்தீவு அமைச்சர்  திருமதி மரியா தீதி  வழங்கிய  அன்பான விருந்தோம்பலுக்கு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது நன்றியைத்  தெரிவித்தார்.

அந்தந்த நாடு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு இரு நட்பு அண்டை நாடுகளின் அர்ப்பணிப்பு உணர்வை இந்தப் பயணம் புதுப்பித்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply