குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஹத்பத்ரா பகுதியில் மயூர்பஞ்சில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தை இன்று (மே 4, 2023) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ‘’போதைப் பழக்கம் என்பது ஒரு நோய். இது சமூகம், பொருளாதாரம், உடல் மற்றும் மனதிற்குச் சாபம். போதைப் பழக்கம் குடும்பத்திலும், சமூகத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருட்களின் மோசமான விளைவுகளை மக்கள் புரிந்து கொள்ளும்போது, அவர்கள் நிச்சயமாக அதிலிருந்து வெளியேற முயற்சிப்பார்கள்’’ என்றார்.
போதைப்பொருள் சமூகத்தின் மிகப்பெரிய எதிரி எனக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது உன்னதமான செயல் எனவும், ஆன்மீகத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் பிரம்ம குமாரிகள் மையம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார். ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தின் வெற்றிக்கு அவர் வாழ்த்தினார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பஹத்பூர் கிராமத்தை அடைந்து மறைந்த ஸ்ரீ ஷயம் சரண் முர்முவுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிராமத்தில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
திவாஹர்