கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு 2022-ன் சின்னம், அடையாளம், உடை மற்றும் பாடலை அனுராக் சிங் தாக்கூர், யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்திரப்பிரதேசத்தில் நாளை தொடங்கிவைக்க உள்ளனர்.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2022-ன் சின்னம், அடையாளம், சீருடை மற்றும் பாடலை திரு அனுராக் தாக்கூர், திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோம்தி நகரில் அமைந்துள்ள இந்திராகாந்தி அறக்கட்டளையில் மே 5-ம் தேதி அன்று, தொடங்கிவைக்க உள்ளனர். 

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளின் 3-வது பகுதி மே 23-ல் தொடங்கி ஜூன் 3 வரை நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சி லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் பல்கலைக்கழகத்தில் மே 22 அன்று நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக், உத்திரப்பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரிஷ் சந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டில் நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4,700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பல்கலைக்கழக விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவாக  21 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. முதன்முறையாக படகுப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் தலைநகர் லக்னோ, வாரணாசி, நொய்டா, கோரக்பூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. துப்பாக்கிச் சுடும் போட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கிச் சுடும் மையத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகள், டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசை மற்றும் ஓடிடி தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply