ஒடிசாவின் பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார்.
மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகம் தனது வரலாற்றின் குறுகிய காலத்திலேயே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனித்துவ அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார மரபுகளின் அடித்தளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் ‘புனித தோப்பு’ நிறுவியதற்காக குடியரசுத்தலைவர் பாராட்டினார். சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பிற்கு ‘புனித தோப்பு’ முக்கியமானது என்று அவர் கூறினார். சமூகம் சார்ந்த இயற்கை வள நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்று அழைக்கப்படும் இயற்கைக்கு ஏற்ற வாழ்க்கை முறையை உலகிற்கு இந்தியா காட்டியுள்ளது. மரங்கள், செடிகள், மலைகள், ஆறுகள் அனைத்திற்கும் உயிர் இருப்பதாகவும், மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் இயற்கையின் குழந்தைகள் என்றும் நம் பாரம்பரியத்தில் நம்பப்படுகிறது. எனவே, இயற்கையோடு இயைந்து வாழ்வது அனைத்து மனிதர்களின் கடமையாகும். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிமிலிபால் தேசியப் பூங்கா பல்லுயிர் பெருக்கத்தில் உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
திவாஹர்