என்.எல்.சி இல்லாவிட்டால் தமிழ்நாடு இருண்டு விடாது என்பது உறுதியானது: வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், 1000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்திருக்கிறார். என்.எல்.சி தலைவரின் இந்தக் கருத்து உள்நோக்கம் கொண்டது என்றாலும் கூட, என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றினால் கூட, அதனால் தமிழ்நாடு இருண்டு விடாது என்பதை தம்மையும் அறியாமல் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய என்.எல்.சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார், உடனடியாக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்றால், தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும், இப்போதே மின்சார உற்பத்தி குறைந்து விட்டதால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். என்.எல்.சி தலைவர் தெரிவித்த கருத்துகள் அபத்தம் என்றாலும் கூட, அதன் பின்னணியில் கடலூர் மாவட்ட மக்களுக்கு எதிரான சதித்திட்டம் இருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக தங்களின் விளைநிலங்களை வழங்க மறுத்து வரும் கடலூர் மாவட்ட உழவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து போராடி வருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டாலும் கூட, அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தான், கடலூர் மாவட்ட மக்கள் நிலங்களைத் தராவிட்டால், மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கும்; அதனால் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த என்.எல்.சி முயல்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர் போராட்டம் நடத்திய போது, கூடங்குளம் அணு உலை திறக்கப்படாதது தான் தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் என்று அப்போதிருந்த மத்திய, மாநில அரசுகளால் செய்திகள் பரப்பப்பட்டன. அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் என்பது தான் அரசுகளின் திட்டமாக இருந்தது. அதே உத்தியை பயன்படுத்தி கடலூர் மாவட்ட உழவர்களுக்கு எதிராக தமிழக மக்களை திருப்பி விடுவதற்கான சதித் திட்டத்தின் விதையைத் தான் என்.எல்.சி தலைவர் விதைத்திருக்கிறார். அதன்பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை மக்கள் அறிவார்கள். இத்தகைய மலிவான சதித்திட்டங்களுக்கு தமிழக மக்கள் இரையாக மாட்டார்கள் என்பதே எனது நம்பிக்கை.

மின்னுற்பத்திக்காக உழவர்களின் நிலங்களை பறிக்க வேண்டும் என்பதே மனிதநேயமற்ற கொள்கை ஆகும். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏராளமான வழிமுறைகள் உள்ளன. எரிவாயு மின்சாரம், உயிரி வாயு மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நீர் மின்சாரம், கடல் அலை மின்சாரம், கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் என பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், உணவு தயாரிக்க ஒரே வழி தான் உள்ளது. நிலங்களில் விவசாயம் செய்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். எனவே, நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கை மனிதகுலத்திற்கு எதிரானது; அது கைவிடப்பட வேண்டும்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத் தான் நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமான பொய் ஆகும். என்.எல்.சியிடம் தேவைக்கு அதிகமாகவே நிலமும், நிலக்கரியும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை என்.எல்.சி அனல் மின்நிலையங்கள் பராமரிப்புக்காக மூடப்படுவது வழக்கம். அதேபோல் தான் இப்போதும் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. என்.எல்.சியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை.

2030&ஆம் ஆண்டு வரையிலான என்.எல்.சி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டம் என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம் பெற்றுள்ள தரவுகளின்படி, கடலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள 3 சுரங்கங்களின் மூலம் என்.எல்.சிக்கு ஆண்டுக்கு 26 மில்லியன் டன் நிலக்கரி கிடைக்கிறது. 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முதலாவது சுரங்கத்தில் 83.83 மில்லியன் டன் நிலக்கரி படிமம் உள்ளது. அடுத்த 11 ஆண்டுகளுக்கு இது போதுமானது. அதேபோல் 1ஏ சுரங்கத்தில் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் மட்டுமே வெட்டி எடுக்கப்படும் நிலையில், அங்குள்ள 161.66 மில்லியன் டன் நிலக்கரி 54 ஆண்டுகளுக்கு போதுமானது. அதேபோல், இரண்டாவது சுரங்கத்தில் உள்ள 282.45 மில்லியன் டன் நிலக்கரியை ஆண்டுக்கு 15 மில்லியன் டன் என்ற அளவில் வெட்டி எடுத்தால், அடுத்த 19 ஆண்டுகளுக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது. உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, நிலக்கரிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் என்.எல்.சி தலைவர் கூறுகிறார்? என்பது தான் புரியவில்லை.

இரண்டாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 1985-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தபடவில்லை. அந்த நிலங்களில் இருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது என்.எல்.சியில் நிலக்கரிக்கும், நிலத்திற்கும் பற்றாக்குறை என்பது நகைச்சுவையாக உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்படும் 26 மில்லியன் டன் நிலக்கரியையும் அப்படியே மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி பயன்படுத்துவதில்லை. மாறாக, அதில் ஒரு பகுதியை வெளிச்சந்தையில் விற்று வருவாய் ஈட்டுகிறது. 2021&22ஆம் ஆண்டில் பழுப்பு நிலக்கரி விற்பனை மூலமாக மட்டும் வரலாறு காணாத வகையில் ரூ.830 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதற்காக அந்த ஆண்டில் மட்டும் நிலக்கரி உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், அதாவது 2021 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 4.31 லட்சம் டன் மட்டுமே பழுப்பு நிலக்கரி விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2022&ஆம் ஆண்டின் அதே காலத்தில் பழுப்பு நிலக்கரி விற்பனை 27.12 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. மேலும், 2022&ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் திசம்பர் வரையிலான 9 மாதங்களில் சுரங்கங்களின் மூலமான என்.எல்.சியின் வருவாய் ரூ.5515.22 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த வருவாயை விட 15.23% (ரூ.729 கோடி) அதிகமாகும்.

நிலக்கரி உற்பத்தி அதிகரிக்காமல், அதன் வாயிலான வருவாய் பெருக வாய்ப்பே இல்லை. அதன்படி நடப்பாண்டிலும் பழுப்பு நிலக்கரி உற்பத்தியும், அதன் விற்பனையும் அதிகரித்திருக்கக் கூடும். என்.எல்.சி அதன் ஆண்டறிக்கையை வெளியிடும் போது இந்த உண்மைகள் தெரியவரும். என்.எல்.சி நிறுவனம் அதன் ஆண்டு உற்பத்தியான 26 மில்லியன் டன் நிலக்கரியில், சுமார் 10 மில்லியன் டன் நிலக்கரியை விற்பனை செய்வதாக அதன் புள்ளிவிவரங்களே ஒப்புக்கொள்ளும் நிலையில், எங்கிருந்து பற்றாக்குறை ஏற்படும்? யார் சொல்லிக் கொடுத்த கணக்கை என்.எல்.சி தலைவர் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்?

1950-களில் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கியதால் தான் என்.எல்.சி நிறுவனம் அமைக்கப்பட்டது. அப்போது உழவர்கள் தங்களின் நிலங்களை வழங்கியதன் நோக்கம் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால், என்.எல்.சி நிறுவனம் பேராசை காரணமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேவையை விட பல லட்சம் டன் நிலக்கரியை வெட்டி எடுத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இரக்கமே இல்லாமல் நிலக்கரி வளத்தை சுரண்டி விற்பனை செய்து வரும் என்.எல்.சி, இன்னும் கூடுதலாக சுரண்டுவதற்காகத் தான் நிலம் வேண்டும்; நிலம் வேண்டும் என கூக்குரலிடுகிறது. அனுமதிக்கப்பட்டதை விட பேராசையில் அதிகமாக நிலக்கரியை சுரண்டியது பெரும் துரோகமாகும்.

தமிழ்நாட்டுக்கு என்.எல்.சி நிறுவனம் இப்போது ஒரு யூனிட் ரூ.2.30க்கு மின்சாரம் வழங்கி வருகிறது. வெளிச்சந்தையில் இதை ரூ.12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதைத் தடுக்க வேண்டுமானால் மக்கள் நிலங்களை வழங்க வேண்டும் என்று என்.எல்.சி தலைவர் கூறியிருக்கிறார். அதன் மூலம் நிலம் தர மறுக்கும் உழவர்களை துரோகிகளாக சித்தரிக்க முயல்கிறார். இது கண்டிக்கத் தக்கது. என்.எல்.சி தலைவரான பிரசன்னகுமாரும் மற்ற பணியாளர்களும் கடலூர் மாவட்ட மக்கள் கொடுத்த நிலங்களில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் ஊதியத்தையும், பிற சலுகைகளையும் பெற்று அனுபவிக்கின்றனர். கடலூர் மாவட்ட மக்கள் செய்த தியாகத்தில் தான் என்.எல்.சி தலைவரும், மற்றவர்களும் கொழிக்கின்றனர். ஆனால், அந்த நன்றி உணர்வே இல்லாமல் தியாகிகளாக போற்றப்பட வேண்டிய கடலூர் மாவட்ட மக்களை துரோகிகளாக சித்தரிக்க என்.எல்.சி தலைவர் முயல்வதை மன்னிக்க முடியாது.

கடலூர் மாவட்ட உழவர்களுக்கு எதிராக பிற மாவட்ட மக்களைத் தூண்டி விடுவதற்கான சதித்திட்டத்தின் அங்கமாக என்.எல்.சி தலைவர் மேற்கொண்டு வரும் பொய்ப்பரப்புரையை அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்திருக்கிறேன். மற்றபடி, தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சியை வெளியேற்றுவதற்காக போராடி வரும் எங்களுக்கு, அது எந்த நெருக்கடியை சந்தித்தாலும், எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டாலும் கவலை இல்லை. என்.எல்.சி வெளியேற்றமே எங்கள் நோக்கம் ஆகும்.
என்.எல்.சி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின்னுற்பத்தி பாதிப்பு என்றெல்லாம் கூறியதன் மூலம் என்.எல்.சியை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைக்கு என்.எல்.சி தலைவர் வலு சேர்த்திருக்கிறார். என்.எல்.சி இல்லாவிட்டாலும் கூட, தமிழ்நாடு இருளில் மூழ்காது என்பது அங்கிருந்து கிடைக்கும் மின்சாரம் குறைக்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சியின் அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படும்; ஆனால், அதில் சராசரியாக 900 மெகாவாட் அளவுக்கு தான் கிடைக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக என்.எல்.சியிடமிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தின் அளவு 685.80 மெகாவாட்டாக குறைக்கப்பட்டு விட்டது. அதிலிருந்து தமிழகத்திற்கு கிட்டத்தட்ட 407 மெகாவாட் அளவுக்கு தான் மின்சாரம் கிடைத்து வருகிறது. என்.எல்.சி வழங்கும் மின்சாரம் 55 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்கப்பட்டாலும் கூட, அதனால் தமிழகத்தின் எந்த மூலையிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் நேற்றைய அதிகபட்ச மின் தேவையான 15,204 மெகாவாட் எந்த சிக்கலும் இல்லாமல் சமாளிக்கப்பட்டிருக்கிறது. என்.எல்.சி வழங்கும் மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும் கூட, அதனால் தமிழ்நாட்டிற்கு சிறு துளி அளவுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

என்.எல்.சி குறைந்த விலையில் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவதாக கூறுவதும் பொய் ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் நாள் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு என்.எல்.சி வழங்கப் போகும் மின்சாரத்தின் விலை யூனிட் ரூ.3.06 ஆகும். ஆனால், அதைவிட குறைவாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.61க்கு மத்திய அரசின் சூரிய எரிசக்தி நிறுவனத்திடமிருந்து வாங்க அதே நாளில் தமிழக அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. எனவே, என்.எல்.சியை நம்பித் தான் தமிழ்நாடு உள்ளது என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த பிரசன்னகுமார் முயலக் கூடாது.

என்.எல்.சிக்கு நிலம் தராவிட்டால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று என்.எல்.சி தலைவர் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். தமிழ்நாட்டில் தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ரூ.5-க்கும் குறைவு தான். தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கும் மின்சாரத்தின் சராசரி விலை ரூ.3.58 மட்டுமே என்று அரசே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும் என்று தமிழக மக்களை அச்சுறுத்தும் வகையில் என்.எல்.சி தலைவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

மீண்டும், மீண்டும் சொல்கிறேன்… தமிழகத்தின் சராசரி மின்தேவை 15,000 மெகாவாட் மட்டும் தான். அதிகபட்சமாக 18000 மெகாவாட் வரை தேவைப்படலாம். ஆனால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 36,000 மெகாவாட். இது தேவையை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இதில் என்.எல்.சி வழங்குவது 800 முதல் 1000 மெகாவாட் வரை என்.எல்.சி வழங்குகிறது. அதற்காக அந்த நிறுவனம் இதுவரை 25,000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கிறது. இப்போது மேலும் 17,000 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை பறிக்க என்.எல்.சி துடிக்கிறது. அதை அனுமதிக்க முடியாது.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, சொந்த மண்ணின் உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாடு அரசு சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை; தமிழகத்தின் அமைச்சர்கள் அந்த நிறுவனத்தின் முகவராக பணி செய்யத் தேவையில்லை. என்.எல்.சி நிறுவனத்தால் உழவர்களுக்கும், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் நலவாழ்வுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வெறு தருணங்களில் விரிவாக பட்டியலிட்டிருக்கிறேன். எனவே, என்.எல்.சிக்காக கடலூர் மாவட்ட உழவர்களை அச்சுறுத்தி நிலங்களை பறிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply