இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (மே 16 முதல் 27வரை)மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இந்தியக் குழுவிற்குத் தலைமைதாங்குகிறார். கேன்ஸ் விழா தொடக்க நாளில் சிவப்புக் கம்பளத்தில் தமிழ்ப் பாரம்பரிய உடையான ‘வேட்டி’ உடுத்தி, நமது செழுமையான இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் டாக்டர் முருகனுடன், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் புகழ் திரைப்பட தயாரிப்பாளர் திருமதி குனீத் மோங்கா, இந்திய நடிகை, மாடல் மற்றும் மிஸ் வேர்ல்ட் 2017 வெற்றியாளரான திருமதி மனுஷி சில்லர், இந்திய சினிமாவின் பாராட்டப்பட்ட நடிகை திருமதி ஈஷா குப்தா, பாராட்டப்பட்ட மணிப்புரி நடிகர் கங்காபம் டோம்பா ஆகியோர் செல்லவிருக்கின்றனர். கங்காபம் டோம்பாவின் மீட்டெடுக்கப்பட்ட திரைப்படமான ‘இஷானவ்’ இந்த ஆண்டு கேன்ஸ் கிளாசிக் பிரிவில் திரையிடப்படுகிறது.
இந்திய அரங்கு, அகமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனத்தால் ‘இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை உலக சமூகத்திற்குக் காண்பித்தல்’ என்ற மையப்பொருளுடன் கருத்தாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தல் வடிவமைப்பு சரஸ்வதி யந்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அறிவு, இசை, கலை, பேச்சு, ஞானம், கற்றல் ஆகியவற்றின்
காவலாளியான சரஸ்வதி தேவியின் சுருக்கமான பிரதிநிதித்துவமாக இந்த அரங்கு அமைந்துள்ளது. அரங்கின் வண்ணங்கள் இந்திய தேசியக் கொடியின் துடிப்பான வண்ணங்களில் இருந்து உத்வேகம் பெறுகின்றன – காவி, வெண்மை, பச்சை மற்றும் நீலம். நாட்டின் வலிமை மற்றும் தைரியத்திற்கு காவி , உள் அமைதி மற்றும் உண்மைக்கு வெள்ளை, நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களத்தை வெளிப்படுத்தும் பச்சை, தர்மம் மற்றும் சத்தியத்தின் விதிகளுக்கு நீலம். திறமைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை இந்தியா கொண்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா