இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (டிடிசி) முதலாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டத்திற்கு இடையே, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஐரோப்பிய வர்த்தக ஆணையர் திரு. வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ்-ஐ சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார். கூட்டத்தில் இருதரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இருதரப்பு விவாதங்களின் போது இரு தரப்புக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை அவர்கள் நினைவு கூர்ந்தனர். இரு தரப்பிலும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை ஆதரிக்கும் சமச்சீர் மற்றும் அர்த்தமுள்ள விளைவுகளுக்கான சந்தை அணுகல் உட்பட பரஸ்பர உணர்திறன்களை சரியான முறையில் பரிசீலித்த பிறகு, அனைத்து பிரச்சினைகளிலும் ஒன்றிணைந்து நடந்துகொண்டிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
உலக வர்த்தக அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுவான முன்னுரிமைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். இந்தியாவிலும் வளரும் நாடுகளின் பெரும் பகுதிகளிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஒருமித்த அடிப்படையிலான தீர்வுகளின் அவசியத்தை இரு தரப்பும் அங்கீகரித்தன. தங்களது கூட்டு முயற்சிகள் வரவிருக்கும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் அர்த்தமுள்ள தீர்வுகளைக் கண்டறிய உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
எம்.பிரபாகரன்