தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில், அனைத்துத் தகுதிகளுடன் கால்நடை உதவி மருத்துவர்களாக 11 ஆண்டுகளாக பணி செய்யும் 454 பேருக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கு மாற்றாக, அவர்கள் அடுத்த தலைமுறை பட்டதாரிகளுடன் போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் பணியில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதி ஆகும்.
கால்நடைப் பராமரிப்புத்துறையில் கடந்த 2012-ஆம் ஆண்டில் ஏராளமான உதவி மருத்துவர் பணிகள் காலியாக இருந்ததாலும், கால்நடை உதவி மருத்துவர்களின் சேவை உடனடியாக தேவைப்பட்டதாலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்பு பணி விதி 10(ஏ)(ஐ)-ன்படி 843 உதவி மருத்துவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பணி அமர்த்தல் தற்காலிகமானது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்குரிய காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்கள் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. இத்தகைய தகுதிகளைக் கொண்ட அவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட உயர்நீதிமன்றம், அவர்கள் பொதுப்போட்டித் தேர்வு எழுதி தான் பணி நிலைப்பு பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து கால்நடை உதவி மருத்துவர்கள் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதேநேரத்தில் அவர்களுக்கு வயது வரம்பில் சலுகையும், அவர்களுக்கு பணி அனுபவத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 5 மதிப்பெண் வீதம் அதிக அளவாக 50 மதிப்பெண் கருணை மதிப்பெண்களும் வழங்கி, டி.என்.பி.எஸ்.சி நடத்தும் பொதுப்போட்டித் தேர்வில் வென்று பணி நிலைப்பு பெறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி அவர்கள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 843 பேரில் இப்போது 454 பேர் மட்டுமே நீடிக்கின்றனர்.
ஆனாலும், 40 வயதைக் கடந்து விட்ட அவர்களால், இப்போது தான் படித்து முடித்து விட்டு தேர்வு எழுத வரும் இளம் பட்டதாரிகளுடன் போட்டியிட முடியாது. கால்நடை உதவி மருத்துவர் பணியில் தொடரும் அவர்களால், பணியையும் கவனித்துக் கொண்டு, போட்டித் தேர்வுக்கும் தயாராக இயலாது. தற்காலிக மருத்துவர்களாக பணியாற்றி வருபவர்கள் படித்த போது நடைமுறையில் இருந்த பாடத் திட்டத்திற்கும், இப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் பாடத் திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அனைத்தும் தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களுக்கு எதிராக உள்ள நிலையில், அவர்களை இளம் பட்டதாரிகளுடன் போட்டித்தேர்வில் போட்டியிடச் செய்வது சமூகநீதியாக இருக்காது.
காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை ஆகும். அப்போது அவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியிருந்தனர். ஆனால், இப்போது அவர்களின் பணி அனுபவம் 11 ஆண்டுகளைத் தாண்டி விட்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பத்தாண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கலாம் என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன. அது இவர்களுக்கும் பொருந்தும்.
கால்நடை உதவி மருத்துவர்கள் எவ்வாறு தமிழ்நாடு மாநில மற்றும் சார்பு பணி விதி 10(ஏ)(ஐ)-ன்படி நியமிக்கப்பட்டார்களோ, அதே விதியின் கீழ் வேளாண்துறையில் உதவிப் பொறியாளர்கள் (வேளாண்மை பொறியியல்) கடந்த 26.05.2012-ஆம் நாள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். ஆனாலும், பின்நாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதி 16(பி)&இன் கீழ் அவர்கள் அனைவரும் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இதுவும் இவர்களுக்கு பொருந்தும்.
இவை அனைத்தையும் கடந்து அரசு கொள்கை முடிவு எடுத்து இவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கினால், அதை எவரும் எதிர்க்க முடியாது. தற்காலிக கால்நடை மருத்துவர்கள் அனைவருக்கும் தேவைக்கும் அதிகமான கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளது; அவர்கள் தங்களின் இளமையை தொலைத்து அரசுக்காக பணி செய்துள்ளனர்; இப்போதுள்ள வயதில் அவர்களால் வேறு எந்த பணிக்கும் செல்ல முடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு விதி 10(ஏ)(ஐ)-ன்படி நியமிக்கப்பட்டு, இப்போது பணியில் தொடரும் 454 கால்நடை உதவி மருத்துவர்களுக்கும் அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா