மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர் முயற்சிகளின் காரணமாக 2022-23 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்திகளின் மதிப்பு முதன் முறையாக ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. தற்போது ரூ. 1,06,800 கோடியாக உள்ள மதிப்பு, மீதமுள்ள தனியார் பாதுகாப்பு தொழில்துறைகளின் தரவு விவரங்கள் வந்த பிறகு மேலும் அதிகரிக்கும். கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ. 95,000 கோடியாக இருந்த பாதுகாப்பு உற்பத்தி, 2022-23 நிதியாண்டில், 12% உயர்ந்துள்ளது.
நாட்டில் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்பு தொழில்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உதவவும், அரசு தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை விநியோக சங்கிலியில் ஒருங்கிணைப்பது உள்பட எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக ஏராளமான கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கொள்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்துறைகள் பாதுகாப்பு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியின் கீழ் இயங்குவதுடன், கடந்த 7-8 ஆண்டுகளில் தொழில்துறைக்கு அரசால் வழங்கப்பட்ட பாதுகாப்பு உரிமங்களின் எண்ணிக்கை சுமார் 200% அதிகரித்துள்ளது. இந்த முயற்சிகள் பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தி சூழலியலுக்கு உத்வேகம் அளித்திருப்பதோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.
எம்.பிரபாகரன்