ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  திரு. நகாதானி ஜென், ஹிரோஷிமா நகர மேயர்  திரு. கசுமி மட்சுயி, ஹிரோஷிமா நகர சட்டமன்றத்தின் சபாநாயகர் திரு. தட்சுனோரி மோட்டானி, ஹிரோஷிமாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், இந்திய சமூக உறுப்பினர்கள், ஜப்பானில் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஹிரோஷிமாவில் 19 முதல் 21 ந்தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான பிரதமரின் பயணத்தின் போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவுச் சிலை பத்ம பூஷன் விருது பெற்ற திரு ராம் வஞ்சி சுதாரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டோயாசு ஆற்றை ஒட்டி, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் – உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் – பார்வையிட்டு வரும்,  அணுகுண்டு நினைவு  சின்னமான கட்டிடத்துக்கு  அருகில் சிலை அமைந்துள்ளது.

அமைதி மற்றும் அகிம்சைக்கான ஒற்றுமையின் அடையாளமாக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை அமைதி மற்றும் அகிம்சைக்காக அர்ப்பணித்தார். இந்த இடம் உண்மையிலேயே காந்திஜியின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கையுடன் எதிரொலிக்கிறது, இது உலகையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply