ஜி20 நாடுகள் மற்றும் நமது நாடு முழுவதும் 37 இடங்களில் இந்தத் தூய்மைப் பணியில் இணைந்த அனைவருக்கும் திரு யாதவ் நன்றி தெரிவித்தார்
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரையில் ஜி20 கடற்கரை சுத்தம்செய்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜி20 நாடுகள் மற்றும் நம் நாடு முழுவதும் 37 இடங்களில் இந்தத் தூய்மைப் படுத்தும் பணியில் இணைந்த அனைவருக்கும் திரு யாதவ் நன்றி தெரிவித்தார். மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பாய்ஸ்; மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே, மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன், மாநில, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைக்கான அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே மற்றும் மகாராஷ்டிர அரசின் அமைச்சர் திரு மங்கள் பிரபாத் லோதா மற்றும் சுற்றுச்சூழல் செயலர் திருமதி லீனா நந்தன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜி20 கடற்கரையை சுத்தம்செய்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நமது பெருங்கடல்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது குறித்த உறுதிமொழியை திரு யாதவ் வழங்கினார்.
ஜி20 இந்தியத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஜி 20 கடற்கரை சுத்தம்செய்தல் நிகழ்வில், ஜி 20 நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களின் நாடுகள், மாநில அரசு அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இந்த 3வது பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.
துப்புரவுப் பணிகளில் கலந்து கொண்ட பிரமுகர்கள் உறுதிமொழி சுவரில் எழுதியதோடு, பள்ளி மாணவர்களின் ஓவியங்களை காட்சிப்படுத்தியதை பாராட்டினர். புகழ்பெற்ற மணல் கலைஞரான சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் வசீகரிக்கும் மணல் கலையை உருவாக்கினார். நிகழ்வின் கருப்பொருளுடன் ஜி20 சின்னமும், லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை) சின்னமும் இந்த மணல் சிற்பத்தில் இடம்பெற்றிருந்தன. கடல் மற்றும் கடல் மாசுபாடு என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலைப் போட்டியில் கலந்து கொண்ட நாடு முழுவதும் உள்ள சுமார் 5,900 பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன மற்றும் சிறந்த 100 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.
எஸ்.சதிஸ் சர்மா