ஆஸ்திரேலியப் பிரதமர் மாண்புமிகு திரு ஆண்டனி அல்பானீசுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
அட்மிரால்டி இல்லத்தில் பிரதமருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
புதுதில்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது வருடாந்திர தலைவர்களின் உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான முடிவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், பல அம்சங்கள் நிறைந்த இந்திய- ஆஸ்திரேலிய விரிவான கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் விரிவுப்படுத்தும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், முக்கிய தாதுக்கள், கல்வி, புலம்பெயர்தல் மற்றும் பரிமாற்றம் மக்களிடையேயான உறவு முதலியவற்றில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் பேசினார்கள்.
இந்தியா-ஆஸ்திரேலியா புலம்பெயர்தல் மற்றும் பரிமாற்றக் கூட்டுமுயற்சி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திறமை வாய்ந்த ஆரம்பகால தொழில் முறையினருக்கான பரிமாற்ற ஏற்பாட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் மேட்ஸ் என்ற புதிய திறன் மேம்பாட்டுக்கான திட்டம் மூலம் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.
இந்திய-ஆஸ்திரேலிய ஹைட்ரஜன் பணிக்குழுவின் விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். இதன்படி, ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள், எரிபொருள் செல்களுடன், ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு மற்றும் தரநிலைகள், ஒழுங்குமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சுத்தமான ஹைட்ரஜனின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் அமைக்கப்படுவதற்கு ஆதரவளித்தமைக்காக ஆஸ்திரேலியாவிற்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்.
விதிகளின் அடிப்படையில், சர்வதேச ஆணைக்கு இணங்க, அமைதியான, வளமான மற்றும் உள்ளடக்கிய இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்யும் தங்களது நிலைப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் பற்றியும் அவர்கள் ஆலோசித்தார்கள்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் மற்றும் அதன் முன்முயற்சிகளுக்கு வலுவான ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி அளித்தார். வரும் 2023, செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் திரு அல்பனீஸ் இந்தியா வரவுள்ளதை ஆவலுடன் எதிர் நோக்குவதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.
திவாஹர்