நாட்டின் நலன்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய ராணுவம் முக்கியமானது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (25.05.2023) இரண்டு நாள் டிஆர்டிஓ- கல்வியாளர் மாநாட்டைத் தொடங்கிவைத்த அவர், எல்லைப் பகுதிகளில் இரட்டை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இத்தகைய ராணுவம் மிகவும் முக்கியமானது என்றார்.
“டிஆர்டிஓ- கல்வியாளர் ஒத்துழைப்பு- வாய்ப்புகளும், சவால்களும்” என்ற மையப்பொருளிலான இந்த மாநாடு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்த திரு ராஜ்நாத் சிங், 21-ம் நூற்றாண்டில் நம்மால் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண இத்தகைய ஒத்துழைப்பு அவசியம் என்றார். இந்த ஒத்துழைப்பு பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியாவை தலைமை ஏற்கும் நாடாக மாற்றுவதற்கு உதவும் என்று அவர் கூறினார்.
“நாம் ஆராய்ச்சி செய்யாதவரை புதிய தொழில்நுட்பங்களை நம்மால் உருவாக்க இயலாது. சாதாரண பொருட்களை மதிப்புமிகு வளங்களாக மாற்றும் திறனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை பெற்றுள்ளது. வரலாறு முழுவதும் நாகரீக வளர்ச்சியில் இது முக்கிய அம்சமாக இருந்துள்ளது” என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் விஞ்ஞானிகளை கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களாக குறிப்பிட்ட காலம் பணியமர்த்துவது புதிய கண்ணோட்டத்தை உருவாக்கும் என்று கூறிய பாதுகாப்பு அமைச்சர், கல்வித்துறையின் அறிஞர்களும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் விஞ்ஞானிகளாக பணியமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏரோநாட்டிக்ஸ், போர்த்தளவாடங்கள், வாழ்க்கை அறிவியல், கடல்சார் நடைமுறைகள் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு செய்த பிரபல விஞ்ஞானிகளை இந்த நிகழ்வில் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் தேவைகளையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்வதில் கல்வியாளர்களுக்கு உகந்த உரைகளின் தொகுப்பையும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 மூத்த கல்வியாளர்கள் பங்கேற்கிறார்கள்.
எம்.பிரபாகரன்