டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார். உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.
இதற்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டேராடூனுக்கும், தில்லிக்கும் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் தொடக்க விழாவில் உத்தராகண்டில் இருந்து பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த ரயில் நாட்டின் தலைநகரை உத்தராகண்ட் என்ற தெய்வீக பூமியுடன் இணைப்பதாகக் கூறினார். இதன் மூலம் இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரம் மேலும் குறைக்கப்படும் என்றும், இந்த ரயிலில் உள்ள வசதிகள் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான தமது பயணம் குறித்து பேசிய பிரதமர், உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்று குறிப்பிட்டார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வறுமையை எதிர்த்துப் போராடுவதிலும் இந்தியா உலகிற்கு நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா, கொவிட் தொற்று பாதிப்பை திறமையாக சமாளித்ததுடன், உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியதையும் அவர், சுட்டிக்காட்டினார்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்பும் இன்றைய சூழ்நிலையில் உத்தராகண்ட் போன்ற அழகான மாநிலங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சுற்றுலா மேம்பாட்டில் வந்தே பாரத் சேவை உத்தராகண்ட் மாநிலத்திற்கு பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே தாம் மேற்கொண்ட கேதார்நாத் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ‘இந்தப் பத்தாண்டுகள் உத்தராகண்டின் ஆண்டுகளாக இருக்கும்’ என்று இயல்பாக கூறியதை நினைவு கூர்ந்தார். சட்டம் ஒழுங்கு நிலைமையை இந்த மாநிலம் சிறப்பாக வைத்திருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை அவர் பாராட்டினார். உலகின் ஆன்மீக உணர்வின் மையமாக இந்த தெய்வீக பூமி திகழும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மாநிலத்தின் திறன்களை உணர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சார்தாம் புனிதத்தளங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து சாதனையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஹரித்வாரில் பாபா கேதார், கும்பம், அர்த்த கும்பம் மற்றும் கன்வார் யாத்திரைகளுக்கு வரும் பக்தர்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு இந்த அளவுக்கு பக்தர்கள் வருவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். உத்தரா கண்ட் மாநிலத்திற்கு இது ஒரு மகத்தான பரிசு என்றும் அவர் கூறினார். மிகப்பெரிய பணிகளை எளிதாக மேற்கொள்ள இரட்டை என்ஜின் அரசு தேவை எனவும், இங்குள்ள இரட்டை என்ஜின் அரசு, இரட்டை சக்தி மற்றும் இரட்டை வேகத்துடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
உத்தராகண்ட் வளர்ச்சிக்கான நவரத்தினா எனப்படும் 9 முக்கிய அம்சங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார். முதல் ரத்னம் என்பது, கேதார்நாத்-பத்ரிநாத் தலத்திற்கு ரூ.1300 கோடியில் புத்துயிர் அளிக்கும் பணி என்று அவர் கூறினார். இரண்டாவதாக, கௌரிகுண்ட்-கேதார்நாத் மற்றும் கோபிந்த் காட்-ஹேம்குண்ட் சாஹிப்பில் ரூ.2500 கோடியில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்படுவது என்று அவர் குறிப்பிட்டார். மூன்றாவதாக, மானஸ் கந்த் மந்திர் மாலா திட்டத்தின் கீழ் குமாவோனின் பழமையான கோவில்களை புதுப்பித்தல் என அவர் தெரிவித்தார். நான்காவதாக, மாநிலத்தில் 4000-க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் சுற்றுலா தங்குமிடங்களை மேம்படுத்தும் பணி என அவர் கூறினார். ஐந்தாவது ரத்தினம் என்பது, 16 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது என்று அவர் கூறினார். ஆறாவதாக, உத்தராகண்டில் சுகாதார சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்து உதம் சிங் நகரில் எய்ம்ஸ் செயற்கைக்கோள் மையம் அமைக்கப்படும் பணிகளை அவர் குறிப்பிட்டார். ஏழாவதாக 2000 கோடி ரூபாய் மதிப்பில் தெஹ்ரி ஏரி மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவது என அவர் தெரிவித்தார். எட்டாவதாக, யோகா மற்றும் சாகச சுற்றுலாவின் தலைநகராக ஹரித்வார் ரிஷிகேஷை வளர்ச்சியடைய செய்வதாகவும், இறுதியாக, தனக்பூர் பாகேஷ்வர் ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும, ஒன்பது நவரத்தினத் திட்டங்களைப் பிரதமர் விளக்கினார்.
எஸ்.சதிஸ் சர்மா