மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மே 25 அன்று ரிஷிகேஷில் (தெஹ்ரி) தொடங்கிவைத்த இரண்டாவது ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் 20 உறுப்பு நாடுகள், 10 விருந்தினர் நாடுகள் மற்றும் இன்டர்போல், ஐஎம்எஃப் உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த 90 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு, ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழுவின் கூடுதல் செயலாளர் திரு. ராகுல் சிங் தலைமை தாங்கினார். ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர் திரு. ஜியோவானி டர்டாக்லியா போல்சினி, இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சர் திரு ஃபேப்ரிசியோ மார்செல்லி ஆகியோர் இணைத் தலைமையேற்றனர்.
சொத்து மீட்பு, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், தகவல் பகிர்வுக்கு முறையான மற்றும் முறைசாரா ஒத்துழைப்பு வழிகள், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து கடந்த மூன்று நாட்களாக ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.
பிரதிநிதிகள் ரிஷிகேஷில் தங்கியிருந்தபோது இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணவு வகைகளை சுவைத்தனர். கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 முதல் 11 வரை மூன்றாவது ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழு கூட்டத்திற்கு மீண்டும் பிரதிநிதிகளை அழைக்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தை வலுப்படுத்தும் ஜி 20 செயல் திட்டத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் வகையில், அமைச்சர்கள் நிலையிலான ஊழல் ஒழிப்புக் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது.
திவாஹர்