மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை மதுரை ஆட்சியாளர் ரத்து செய்துள்ளது பத்திரிக்கையாளர்களுக்கிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பத்திரிக்கையாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை சூரியா நகரில் 86 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனை பட்டா 3 சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 816 என்று நிர்ணயம் செய்ப்பட்டது. இதில் 46 பேர் உடனடியாக பணம் செலுத்தி பட்டா பெற்றுவிட்டனர்.
இந்நிலையில் இலவச வீட்டுமனை பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பெற்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் சுற்றளவில் அவர்களது குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் இருக்க கூடாது என்பது நிபந்தனை. ஆனால் காலக்கிரையத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனைகள் பொருந்தாது. இருந்தபொழுதும் தவறாக இவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என்று அறிவிக்கபட்டிருந்தது. இவற்றில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும் என்று அரசிற்கு பத்திரிகையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை அளித்திருந்த நிலையில் தற்பொழுது 38 பத்திரிகையாளர்களின் வீட்டுமனை பட்டாக்களை மதுரை மாவட்ட ஆட்சியாளர் ரத்து செய்திருக்கிறார்.
தமிழகத்தில் மதுரையை தவிர வேறு எங்கும் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிக்காட்டி மதிப்பை 4 ஆண்டுகளுக்கு முன்னரே செலுத்தி வீட்டுமனையை பெற்றிருந்த நிலையில் தற்பொழுது பட்டாவை ரத்து செய்திருப்பது நியாயமில்லை.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை ஒதுக்கீட்டில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லையென பத்திரிக்கையாளர்கள் கருதுகிறார்கள். எனவே பத்திரிகையாளர்களின் நலன்சார்ந்து தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கையின் மூலம் ரத்துசெய்யப்பட்ட வீட்டுமனை ஒதுக்கீட்டை அவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா