இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.
மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் ராக்கெட் தயாரிப்பில் இந்தியாவுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் உலக அளவில் பெருமை சேர்கிறது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக சென்று, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் தனித்திறமை உலகம் முழுவதும் வெளிப்படுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல்.
மத்திய அரசு இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை தயாரிக்க, விண்ணில் செலுத்த, என்.வி.எஸ். 01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த ஆரம்பம் முதல் கடுமையான உழைப்பையும், முயற்சிகளையும் மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் த.மா.கா சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
எஸ்.திவ்யா