ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை எட்ட நமக்குள் இந்தி மொழி இணக்கத்தை உருவாக்குகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அலுவலகப் பணிகளில் இந்தி மொழியை புகுத்த உதவும் வகையில் மத்திய அரசு இந்தி ஆலோசனைக் கமிட்டியை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி இந்தியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான சிறந்த பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தி ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் முன்னேற்றத்திற்கான தேசிய அளவிலான முயற்சிகளில் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி வலியுறுத்தியதை நினைவுகூர்ந்தார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் தங்களது அலுவலகப் பயன்பாட்டிற்கு இந்தி மொழியை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர், இந்தப் பொறுப்பை ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் உணர்ந்து செயல்படுவதாகவும் கூறினார். இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும், ஒட்டு மொத்த தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மத்திய அரசு சீர்திருத்தம், செயல்பாடு, வளர்ச்சி என்ற கொள்கையின் அடிப்படையில் தீர்க்கமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார். சர்வதேச அளவிலான கூட்டமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, அடிக்கடி இந்தியில் உரையாற்றுவதை நினைவுகூர்ந்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, அனைத்து இந்திய மொழிகளுடனும் இணக்கமான எளிமையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியின் மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
திவாஹர்