கர்நாடக துணை முதலமைச்சர். மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது !-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை .

கர்நாடக அரசின் வீண்பிடிவாதப்போக்கான மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பை தெரிவிப்பதோடு அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட வேண்டும்.

கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.

அதுவும் ஆட்சிப்பொறுப்பேற்ற உடனேயே தமிழக விவசாயிகளின் உயிர்ப்பிரச்சனையான காவிரி நீர் தேவையை தடுக்கும் விதமாக அணைக்கட்டுவது குறித்து தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்புறவுக்கு உகந்ததாக அமையாது.குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுத்தி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூடடணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply