மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் அதிநவீன தேசிய பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

விடுதலையின் அமிர்த காலத்தில் வளர்ந்த நாடு என்ற இலக்கை நாம் அடைவதற்கு நம் குடிமக்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான மக்கள் தான் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாட்டை உருவாக்குகிறார்கள்”, என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் அதிநவீன தேசிய பயிற்சி மையத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங் பாகெல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு முறைகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டி, “நல்ல, தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு, நோய்களை அண்ட விடாது”, என்றும், இந்தியாவின் பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளை மருத்துவமனைகளில் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

உணவு கலப்படம் பற்றி பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவரை கண்டறிவதற்காக மாநில அதிகாரிகளுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் குழு ஒன்றை அமைத்திருப்பதாகக் கூறினார். “உணவு கலப்படத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சாலையோர உணவு வியாபாரிகளுக்கான உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி மாதிரிகள் அடங்கிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் ஃபாஸ்டாக் (FoSTaC) என்ற மின்னணு கற்றல் செயலியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறை அடங்கிய இரண்டு புத்தகங்களையும் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply