தமிழக அரசு, மேட்டூர் அணையை திறக்க இருப்பதால் அதற்கு முன்பாக விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.அதாவது குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரானது கடைமடைப்பகுதி வரை செல்லவும், விவசாயம் செய்வதற்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பருத்தி, எள், வாழை, நெற்பயிர்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மழையால், வெயிலால், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்குண்டான நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கினால் தான் அந்த தொகையைக் கொண்டு ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணையின் நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தி பலன் அடையலாம்.
ஏரி, குளங்களில் நடப்பட்டுள்ள நீர் கருவை மரங்களை அகற்றி நீரின் கொள்ளளவைப் பெருக்க வழி வகைச் செய்தால் தான் பாசனப் பயிர்கள் பாதிக்கப்படாது,குறிப்பாக குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவிகளை கூட்டுறவு சங்கங்கள் தாமதமின்றி வழங்கவும், தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விடவும், தரமான விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் வழங்கவும், பயிர் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், ஒரு நபருக்கு மானிய விலையில் 20 கிலோ மட்டும் வழங்கும் நடைமுறையை மாற்றி விவசாயிகளின் நிலப்பரப்பிற்கு ஏற்ப தாராளமாக விதை நெல் கிடைக்கவும், இடுஉரம் வழங்கவும், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கவும், அரசின் உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரம் செலுத்த வலியுறுத்தாமல் இருக்கவும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு, ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை திறக்க இருக்கும் வேளையில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவர்களின் எதிர்பார்ப்பை காலத்தே நிறைவேற்றினால் தான், குறுவை சாகுபடியை சிரமமில்லாமல் செய்து விவசாயத் தொழில் மேம்படும்.
திறக்கப்பட இருக்கும் மேட்டூர் அணையின் நீரினால் விவசாயப் பயிர்கள் விளைச்சல் பெற்று, நல்ல மகசூல் கிடைத்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வளம் பெற தமிழக அரசின் செயல்பாடுகள் மிக மிக முக்கியமானதாக அமைய வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்