கோகுல்ராஜ் கொலை வழக்கு!-விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை!-முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!-தீர்ப்பின் உண்மை நகல்.

THE HONOURABLE Mr. JUSTICE M.S.RAMESH.

THE HONOURABLE Mr. JUSTICE N. ANAND VENKATESH.

கொலைக் குற்றவாளி யுவராஜ்.

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ்.

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று மதுரை வன்கொடுமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (02.06.2023) உறுதி செய்துள்ளது. கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

sodapdf-watermarked

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டுவந்தார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம்’ என்று கூறி உடலை வாங்க அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர். அதையடுத்து 6 பேரை போலிசார் கைது செய்தார்கள்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 2ஆம் தேதி உடலைக் கொடுத்தார்கள். இதனையடுத்து கோகுல்ராஜ் உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.- CCTV (closed-circuit television) கேமராவில் பதிவாகியிருந்தது. அதுவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது.

இந்த வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் யுவராஜ் பரபரப்பை ஏற்படுத்தினார். தலைமறைவாக இருந்தாலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது.

இந்நிலையில், நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் யுவராஜ் தகவல் அனுப்பியிருந்தார் . 100 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபார் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார்.இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன் பின்பு 2015 டிசம்பர் 25ஆம் ஆண்டு யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரம் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 பேரை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது.

தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்து சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். கோகுல் ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது விசாரணை நடத்தியதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அதேபோல் இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோகுல்ராஜ் மரணம் குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்தனர். கோயிலின் மேற்குப்புற வாசலில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொடிமரத்தின் அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களைப் பார்வையிட்டனர். அதன் வழியாக, கோகுல் ராஜும், சுவாதியும் உள்ளே வரும் காட்சியும், யுவராஜ், அவரின் கும்பலுடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகியிருக்கிற நிலையில், மீண்டும் கோயிலுக்குள் வந்த யுவராஜ், அவரின் ஆட்கள் எந்த வழியாக வெளியேறினார்கள் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு புற வாயில்களிலும் உள்ள கேமராக்கள், கேமரா இல்லாத பகுதிகள் எவை என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வை முடித்தபிறகு, கோகுல்ராஜ் உடல் கிடந்த ரயில்வே டிராக் உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதிக்குச் சென்று, அங்கும் ஆய்வை மேற்கொண்டனர். சி.சி.டி.வி காட்சிகள், தடய அறிவியல் துறை (Forensic Department) க்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது முக்கியமான சாட்சி. மூன்றாவதாக, தனியார் தொலைக்காட்சியில் வலியப்போய் யுவராஜ் கொடுத்த பேட்டி. இவைதான் இந்த குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மதுரை வன்கொடுமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் உறுதி செய்து இன்று (02.06.2023) தீர்ப்பளித்தனர்.

அதன்படி, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ், அவரின் ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், ஆகிய 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply