கடல்சார் வர்த்தக திறனை அதிகரிக்க அண்டை நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் வலியுறுத்தல்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், இன்று கொல்கத்தாவில், வங்காள விரிகுடா பகுதியில் கடல்சார் வளர்ச்சியின் பங்குதாரர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மத்திய துறைமுகங்கள், கப்பல்  போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.  பூட்டான், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தூதர்கள், தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் உரையாடிய அமைச்சர்,  பிராந்தியத்தின் கடல்சார் துறையில் அனைத்து பங்குதாரர்களிடையே  அதிக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் கிழக்குப் பிராந்தியம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான், வங்கதேசம், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கிழக்குக் கொள்கையின் அதிகபட்ச திறனை அடைய நரேந்திர மோடி அரசு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் திரு சோனோவால் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பிரபலமான பெரும் வணிக  நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், “பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கிழக்கு நோக்கிய கொள்கை முன்னெப்போதும் இல்லாத வேகத்தைப் பெற்றுள்ளது, இது பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் புதிய யுகத்தை ஏற்படுத்துகிறது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம்,  கவர்ச்சிகரமான வணிக முன்மொழிவை உருவாக்குவதற்கு உந்துசக்தியாக இருக்கும்.  கடல்சார் துறை மற்றும் உள்நாட்டு நீர்வழித் துறை ஆகியவை இந்த தொலைநோக்கு போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.  இது பொருளாதார ரீதியில் சரக்கு போக்குவரத்துக்கும் வழிவகுக்கும்.  இந்த முக்கியமான பயணத்தில், ஒவ்வொருவருக்கும் அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் வகையில், தங்களின் தீவிர ஆதரவையும் விரைவான ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை,  இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு மட்டுமல்லாமல், வங்காளதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வணிக நலன்களின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. வாரணாசியிலிருந்து வங்காளதேசம் வழியாக திப்ருகர் வரை பயணித்த கங்கா விலாஸ் கப்பலின் வெற்றி, தெற்காசியப் பிராந்தியத்தில் நதிச் சுற்றுலாவின் வளமான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி, நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இதேபோல், மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தின்  வெற்றிகரமான செயல்பாடு,  வடகிழக்கு இந்தியா, பூடான் மற்றும் வங்காளதேசத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறக்கும். பிராந்தியத்தில் கடல்சார் துறையின் மேம்பாட்டிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எங்கள் வளமான நதிக்கரை அமைப்பைப் பயன்படுத்தி போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்துவோம் என்று மைச்சர் கூறினார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply