இதுவும் கடந்து போகும்; எதற்கும் தயாராக இரு!- மாற்றத்தை உருவாக்குவோம்!-பூரண மதுவிலக்கு!-விரைவில் விடை கிடைக்கும்!-நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும்.

மனித குலத்தையே சீரழித்து வரும் ‘மது மற்றும் போதை’ எனும் அரக்கனை இங்கு முழுமையாக ஒழித்துக் கட்டாத வரை, இங்கு மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது; சுதந்திரமாக நடமாடவும் முடியாது. குடும்ப பிரச்சனைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும், சாலை விபத்துக்களுக்கும், சாதாரண மற்றும் கொடிய குற்றங்களுக்கும், சட்ட – ஒழுங்கு பிரச்சனைகளுக்கும், இங்கு நடக்கும் ஒட்டுமொத்த தீமைகளுக்கும், மதுவும்,போதைப் பொருட்களும் தான் முழுமையான காரணம்.

மது மற்றும் போதைப் பழக்கத்தால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடும்ப வாழ்வியல் சூழல் முற்றிலுமாக சிதைந்து சின்னா பின்னமாகி இருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது. குடிகாரர்களின் குடும்ப வன்முறையால், உயிரிழப்பால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருவறை முதல் கல்லறை வரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதை யாராலும் மறுக்கவும் முடியாது; திரைப்போட்டு மறைக்கவும் முடியாது. அப்படி இருந்தும் இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை தரம் சுபிட்சமாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் மது -போதை தான். மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு; உடலுக்கும் கேடு என்று மது பாட்டிலில் அச்சிட்டு, நாடு முழுவதும் வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து அரசாங்கமே நேரடியாக மது விற்பனை செய்து வருவது, தாய் தான் பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொள்வதற்கு சமம்.

மேலும், மது விநியோகம் மற்றும் மது விற்பனை செய்யும் பணிகளில் படித்த இளைஞர்களை பணியமர்த்தியிருப்பது, அவர்களை கண்காணிப்பதற்கு ஐ.ஏ.எஸ் மற்றும் அதற்கு சமமான அந்தஸ்தில் உள்ள படித்தவர்களை தலைமை அதிகாரிகளாக அமர்ந்திருப்பது, இது ஒரு வரலாற்று களங்கம். இதை ஒரு தேசக்குற்றமாகவும், தேசிய அவமானமாகவும் நாம் ஒவ்வொருவரும் கருத வேண்டும். குழந்தைகளின் வருமானம் மட்டும் அவமானம் அல்ல! மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த தேசத்திற்கு அவமானம் தான்.

நாடு முழுவதும் உள்ள மது ஆலைகளையும், மது கடைகளையும் நஷ்ட ஈடு தராமல் உடனே மூட வேண்டும். காந்தி தேசத்தில் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யக்கூடாது. மருந்து மற்றும் இரசாயன பயன்பாட்டிற்கு மட்டும்தான் மதுவை பயன்படுத்த வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட தேசிய அளவில் பூரண மதுவிலக்கு என்பதுதான் இதற்கு நிரந்தரமான தீர்வு என்பதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதற்காகத்தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதே சமயம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஈடு கட்டுவதற்கு நேர்மையான முறையில் ஏராளமான வழிமுறைகள் இருக்கிறது. எனவே, மது விற்பனையை நம்பி தான் அரசாங்கம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், டாஸ்மாக் (TASMAC) பணியாளர்கள் அனைவருக்கும் மாற்று வேலை வழங்கி மற்ற அரசு பணியாளர்களைப் போலவே அவர்களையும் கௌரவமாக வாழ வைக்க முடியும்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் மது நோயாளிகள் அனைவரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தில் கடுகளவும் உண்மை இல்லை என்பது ‘கொரோனா’ காலகட்டத்தில் நிரூபணம் ஆகிவிட்டது. எனவே, அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ள சாராயம் தலைவிரித்தாடும். அதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று சொல்வதை நடைமுறையில் ஏற்க முடியாது. காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு சொட்டு மது கூட யாரும் விற்க முடியாது என்பது தான் கசப்பான உண்மை.

இருசக்கர வாகனத்தில் ‘தலைக்கவசம்’ அணியாமல் செல்லும் அப்பாவி கூலித் தொழிலாளர்களை தீவிரவாதிகளைப்போல துரத்தி, துரத்தி பிடித்து அபராதம் விதிப்பதில் காட்டு கடமை உணர்வை, கள்ளச்சார வியாபாரிகளிடமும், சட்டம் – ஒழுங்கிற்கு சவாலாக இருக்கும் சமூக விரோதிகளிடமும் ஒரு சதவீதம் காட்டினாலே போதும்; குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்து விடும்.

இச்சூழ்நிலையில் திமுகவும் சரியில்லை; அதிமுகவும் சரியில்லை. இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்தால் மட்டுமே தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும் என்று வீர வசனம் பேசிக்கொண்டே, தேர்தல் சமயத்தில் அதே இரு திராவிட கட்சிகளுடனும், ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துக் கொண்டு மற்ற இதர கட்சிகள் தங்கள் காலத்தை ஒப்பேத்தி வருகின்றனர். இதைவிட முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்?!

இவர்கள் நினைப்பதை போல, சொல்வதைப் போல திமுகவையும், அதிமுகவையும் அவ்வளவு எளிதில் ஒரே நேரத்தில் யாரும் அழித்து விட முடியாது. தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, ஆலம் விழுதுகளைப் போல அந்த இரு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றி விட்டது. அதை அண்டி பிழைக்கும் அரசியல் கட்சிகள் அந்த மரத்தடியில் கீழே விழுந்துக் கிடக்கும் பழங்களை தின்னலாம், அந்த மரத்தடியில் சில காலம் தங்கி இளைப்பாறலாம், எச்சமிடலாம். ஆனால், அதே இடத்தில் அந்த மரத்திற்கு போட்டியாக அதன் நிழலில் வேறொரு மரம் ஒருகாலமும் வளரவே முடியாது. இதுதான் எதார்த்தமான உண்மை. இதுதான் கடந்த கால வரலாறு. இதே நிலை நீடித்தால் இனி வரும் காலமும் இப்படி தான் இருக்கும். இது சத்தியம்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்று மக்கள் மட்டுமல்ல; அரசியல் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல; இங்கு உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் நிலையும் ப்படியாகதான் இருக்கிறது.

அப்படியானால் இதற்கு ஒரு விடிவு காலமே கிடையாதா?

இதற்கு தீர்வு இல்லை என்று யார் சொன்னது?!

அப்படியானால் இதற்கு என்ன செய்ய வேண்டும்?!

பூரண மதுவிலக்குக் கொள்கையில் மிக உறுதியாக இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

ஆனால், ஏனோ தெரியவில்லை; தமிழ்நாட்டின் சாபக்கேடு, இங்கே உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஜாதி, மத, இன, மொழிப் பேதத்தாலும், ஓட்டு அரசியலாலும்,தேர்தல் கூட்டணி குழப்பங்களாலும், சுய லாபத்திற்காக, தங்களது சுயத்தையும், சுதந்திரத்தையும் இழந்து; ஒற்றுமை உணர்வை மறந்து, தனித்தனியாக சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட எருதுகளைப் போல தாங்களும் பலியாவதோடு, தாங்கள் கொண்ட கொள்கைகளையும், தங்களையே உலகம் என்று முழுமையாக நம்பி கொண்டு இருக்கின்ற அப்பாவி தொண்டர்களையும், சமூகத்தில் உள்ள விளிம்புநிலை மக்களையும் இங்கு தொடர்ந்து பலி கொடுத்து வருகிறார்கள்.

தவறுகளில் இருந்து தகுந்த பாடம் கற்றுக் கொள்ளாதவன் நிச்சயம் தலைவன் என்ற நிலையை ஒரு காலமும் அடையவே முடியாது. தான் கற்றக் கல்வியும்,பெற்ற அனுபவமும் மற்றவர்களுக்கு குறிப்பாக விளிம்புநிலை மக்களுக்கு பயன்பட வேண்டும்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ்-முனைவர் தொல். திருமாவளவன்.

முனைவர் தொல் திருமாவளவன் – தி.வேல்முருகன்.

கே அண்ணாமலை – செ.சீமான்.

வைகோ – மருத்துவர் க.கிருஷ்ணசாமி.

ஜி.கே.வாசன்.

அந்த வகையில் அரசியல் பொதுத் தளத்தில் சமூக அக்கறையோடு எந்நேரமும் எப்போதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்; பூரண மதுவிலக்கு கொள்கையில் மிக உறுதியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ.சீமான், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் இவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் நலன் கருதி பொது பிரச்சனைகளில் ஒன்று சேர வேண்டும். ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல; மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், வருங்கால தலைமுறைக்காகவும் ஒன்றுபட்டு செயல்படுவது நாட்டுக்கும் நல்லது; அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கும் நல்லது. மனது இருந்தால் மார்க்கம் உண்டு! இவர்கள் மனது வைத்தால் 24 மணி நேரத்தில் ஒன்று சேர முடியும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை இவர்களால் நிச்சயம் கொண்டு வர முடியும்.

இப்படி செய்வதின் மூலம் நாளைக்கே தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்றோ; இரண்டு திராவிடக் கட்சிகளின் தயவு இல்லாமல் முதல்வர் நாற்காலியில் இவர்கள் அமர்ந்து விடலாம் என்றோ, இதுபோன்ற ஆசை வார்த்தைகளை சொல்ல நான் ஒன்றும் அரசியல் தெரியாதவன் அல்ல. நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும், எப்படி ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக எதிர்காலத்தில் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள். கடந்த 35 ஆண்டுகாலமாக இந்திய அரசியலை உன்னிப்பாக உற்றுநோக்கி வருகிறவன் என்கிற முறையிலும், பொது வாழ்க்கையில் மக்களோடு, மக்களாக இருந்து இதழியல் களப்பணி ஆற்றி வருகின்றவன் என்கிற முறையிலும் என்னால் இதை இங்கு உறுதியாக சொல்ல முடியும்.

நாடு வளமாகவும், மக்கள் நலமாகவும் வாழ வேண்டுமானால் பொதுநோக்கத்திற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், ‘மக்கள் நலன்’ என்று வருகிறபோது சுய விருப்பு,வெறுப்புகளையெல்லாம் தூர தூக்கியெறிந்து விட்டு மக்களின் நலன் ஒன்றே உயிர் மூச்சாக கருதி அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். பொதுநோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஒரு கணவன் – மனைவிக்கும் இடையே ஆயிரம் கருத்து முரண்பாடுகள், பிரிவினை இருந்தாலும், தங்களின் குழந்தைகளின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்பதற்காக, தங்களது பிடிவாத குணங்களையும், சுய பச்சாதாபங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், எதிர்காலத்திற்காகவும், தங்களின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் எவ்வாறு தியாகம் செய்கிறார்களோ; அதைபோல, நாட்டு மக்களின் நலனுக்காக, பொதுநோக்கத்திற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தியாக உள்ளதோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் இங்கு மாற்றத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் பூரண மதுவிலக்கையும் இங்கு கொண்டு வர முடியும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2023/06/04/87556/

Leave a Reply