5-வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

உலக உணவுப் பாதுகாப்பு தினமான இன்று (07.06.2023) புதுதில்லியில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உணவுப் பாதுகாப்பு தொடர்பான சாதனையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை  இணை அமைச்சர் திரு எஸ் பி சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், 5-வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். உணவு பாதுகாப்பு தொடர்பான 6 அம்சங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்தக் குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களின் தரவரிசை அடிப்படையில் கேரளா, முதலிடம் பெற்றுள்ளது. பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு அதற்கு அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களைப் பொறுத்தவரை கோவா முதலிடத்திலும், மணிப்பூர் மற்றும் சிக்கிம் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும், தில்லி மற்றும் சண்டிகர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 25 லட்சம் உணவு தொழில்முனைவோருக்கு எஃப்எஸ்எஸ்ஐஏ-வால் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  உணவின் தரம் என்பது ஆரோக்கியத்தின் அடையாளங்களில் ஒன்று என்று அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply