பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சில புதிய அம்சங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய சில புதிய கருத்தாக்கங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளி பொருளாதாரம்  ஆகியவை  அடங்கும் என மத்திய அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர  மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை நினைவுகூரும்  ஒரு மாத  கால இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று நடைபெற்ற தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய  ஜிதேந்திர சிங், பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பிரதமரின் அணுகுமுறைகள் சிறப்பு வாய்ந்தவை என்று கூறினார். முறைகேடுகளைத் தடுப்பதன் மூலமும், வணிகம் புரிவதை எளிதாக்குவதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அதற்கு புதிய பரிமாணங்களை பிரதமர் அறிமுகப்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார். முக்கியமான இந்த அம்சங்களில்  முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.  இந்தியா உலக அளவில் போட்டியிட  வேண்டும்  என்றால், உலகளாவிய  தரநிலைகளுடன் போட்டியிடும் வகையில் நமது உற்பத்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்பே விண்வெளிப் பயணத்தை தொடங்கிவிட்டன என்று கூறிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது விண்வெளிப் பயணம் தொடங்கியிருந்தாலும், தற்போது அந்த  நாடுகள் தங்கள்  செயற்கைக்கோள்களைச் செலுத்த, இஸ்ரோ-வின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் இது பெருமைக்குரிய விஷயம் என்றும் அமைச்சர் கூறினார். இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட 385 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 353 செயற்கைக்கோள்கள் கடந்த 9 ஆண்டுகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐரோப்பிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன்  மூலம்  86  மில்லியன் யூரோ தொகை  கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ள நிலையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலமாகவும் வருவாயை  ஈட்டியுள்ளது என்று டாக்டர்  ஜிதேந்திர சிங் கூறினார்.

நீலப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் ஆழ்கடல் இயக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடலுக்கு அடியில் மறைந்திருக்கும்  செல்வ வளங்களைப் பற்றி மக்களுக்கு  விழிப்புணர்வை  ஏற்படுத்தப் பிரதமர் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

வணிகத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் அனைத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளதாகக் கூறிய அவர், சில சமயங்களில் அதைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாததால் அவற்றை சிலரால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். வணிகத்தை எளிதாக்குவதற்கும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவித்து அவர்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மத்திய அரசு தற்போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

புத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரையில்  உலகளவில் இந்தியா மூன்றாவது  இடத்தில் உள்ளது எனவும், இதற்கான பெருமை பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சாரும் என்று அவர் தெரிவித்தார். இதைத் தக்கவைத்துக் கொண்டு மேலும் முன்னேற்றம் அடைய கடுமையாக பாடுபடவேண்டும் என்று திரு ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply