ஜம்மு-காஷ்மீரில், தேசிய நெடுஞ்சாலை 44-ன் உதம்பூர் – ராம்பன் பிரிவில் ஷெனாப் ஆற்றில் கட்டப்பட்டு வரும் 2 வழி ஜெய்ஸ்வால் பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்ததாக மத்திய சாலைப்போக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தொடர் திட்டப்பதிவுகளில், மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் 118 மீட்டர் நீளத்தைக் கொண்டது. ரூ.20 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் இரட்டை நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என திரு கட்கரி தெரிவித்துள்ளார். முதலாவதாக, சந்தர்கோட் முதல் ராம்பன் வரையிலான பிரிவில் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைத்து சுமூகமான வாகனப் போக்குவரத்தை இது உறுதி செய்யும். இரண்டாவதாக வாகனங்களில் தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44-ல் விரைவில் தொடங்க உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரையின்போது பக்தர்கள் போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு மிகச் சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம் என்று திரு கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பெரும் மாறுதலுக்குரிய வளர்ச்சி இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் சிறந்த சுற்றுலாத் தளமாக பயணிகளை ஈர்க்கவும் வகை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
எம்.பிரபாகரன்