தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவமான கொள்கை அரசு வேலைவாய்ப்பு நியமனங்களை முறைப்படுத்தியுள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறையின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து எடுத்துரைத்தார். அரசின் பெரும்பாலான நிர்வாக சீர்திருத்தங்கள் இளைஞர்களை மையப்படுத்தியவை என்று அவர் தெரிவித்தார். அரசின் வேலைவாய்ப்புத் திருவிழா இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கும் மிகப் பெரிய முன்முயற்சி என்று அவர் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் விரைவான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மற்றும் பாரபட்சமற்ற பணி நியமன நடைமுறைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பு பணிநியமன நடைமுறைகளில் இருந்த சிக்கல்களை எடுத்துரைத்த அவர், பணியாளர் தேர்வாணையத்தின் நடைமுறைகள் முன்பு 15 முதல் 18 மாத கால ஆனது என்றார். தற்போது புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் 6 முதல் 8 மாதங்களுக்குள் நிறைவடைவதை பிரதமர் சுட்டடிக்காட்டியிருப்பதையும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு, வேலைவாய்ப்புத் திருவிழாக்களின் மூலம் 10 லட்ச பணி நியமன ஆணைகளை வழங்கும் இலக்கை எட்ட தீவிரமாக செயலாற்றி வருகிறது என்று அவர் கூறினார். கர்மயோகி இயக்கத்தின் மூலம் அரசு ஊழியர்களின் திறன் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மத்திய செயலகத்தில் உள்ள 75 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இ-ஆபீஸ் மென்பொருளின் 7-வது பதிப்பு நிறுவப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மத்திய செயலகத்தில் 89.6 சதவீத தொகுப்புகள் மின் கோப்புகளாக மாற்றப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்